

பெங்களூரு: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் கால் இறுதி சுற்றில் கிழக்கு மண்டலம் - வடகிழக்கு மண்டலம் மோதிய ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டலம் 467 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷாபாஸ் அகமது 167, சுதீப் குமார் கராமி 146 ரன்கள் விளாசினர்.
அதேவேளையில் வடகிழக்கு மண்டலம் அணி 42.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. பாலோ-ஆன் பெற்ற வடகிழக்கு மண்டலம் 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடியது. இம்முறை அந்த அணி 50 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ஜோதின் 39, ஆகாஷ் சவுத்ரி 27, கிஷான் லின்டாக் 25, ஆஷிஸ் தாபா 20 ரன்கள் சேர்த்தனர். பந்துவீச்சில் கிழக்கு மண்டலம் அணி தரப்பில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அணுகுல் ராய் 5 விக்கெட்களை வீழ்த்தினார். வைபவ் சூர்யவன்ஷி 2 விக்கெட்களை கைப்பற்றினார். இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கிழக்கு மண்டல அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.