உஸ்மான் டெம்பலே ஹாட்ரிக் கோல்: நார்வே அணியை பந்தாடியது பிரான்ஸ் | FIFA WC 2026

4-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி
உஸ்மான் டெம்பலே ஹாட்ரிக் கோல்: நார்வே அணியை பந்தாடியது பிரான்ஸ் | FIFA WC 2026
Updated on
1 min read

பாஸ்டன்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஜில்லெட் மைதானத்தில் ‘ஐ’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் - நார்வே அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன. இதனால் நார்வே அணியில் நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலந்து உள்ளிட்ட 10 வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் செனகல் அணியையும், 2-வது ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் இராக் அணியையும் வீழ்த்தியிருந்தது.

தற்போதைய வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி லீக் சுற்றை 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது. நட்சத்திர வீரரான உஸ்மான் டெம்பலே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அணியின் கடைசி கோலை 90+4-வது நிமிடத்தில் டெசிரே துவே அடித்தார். நார்வே அணி தரப்பில் 21-வது நிமிடத்தில் தெலோ ஆஸ்கார்ட் கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 7, 20 மற்றும் 32-வது நிமிடங்களில் உஸ்மான் டெம்பலே கோல் அடித்தார். கடந்த 1994-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கேமரூன் அணிக்கு எதிராக முதல் 45 நிமிடங்களில் ரஷ்ய அணியின் முன்கள வீரர் ஒலெக் சாலென்கோ ஹாட்ரிக் கோல்களை அடித்திருந்தார். அதன் பின்னர் முதல் பாதியில் அடிக்கப்பட்ட ஹாட்ரிக் கோல் இதுவாகும்.

இருப்பினும், உலகக் கோப்பை கால்பந்து தொடரின் வரலாற்றில் போட்டி தொடங்கியதிலிருந்து மிக அதிவேகமாக அடிக்கப்பட்ட ஹாட்ரிக் கோல், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 1954-ம் ஆண்டு தொடரில் நிகழ்ந்தது. செக்கோஸ்லோவாக்கியா அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் 24 நிமிடங்களிலேயே ஆஸ்திரியா அணியின் முன்கள வீரர் எரிச் ப்ரோப்ஸ்ட் ஹாட்ரிக் கோல்களை அடித்து சாதனை படைத்திருந்தார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் நார்வே அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் இராக் அணியையும், 2-வது ஆட்டத்தில் செனகல் அணியை 3-2 என்ற கோல் கணக்கிலும் வென்றிருந்தது.

1998-ம் ஆண்டுக்கு பிறகு: பிரான்ஸ் அணி தனது சொந்த மண்ணில் முதன்முறையாக உலகக் கோப்பையை வென்ற 1998-ம் ஆண்டுக்கு பிறகு, தற்போதுதான் உலகக் கோப்பைத் தொடர் ஒன்றின் லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. உஸ்மான் டெம்பலே அடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஹாட்ரிக் கோல்களின் உதவியால் பிரான்ஸ் அணி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

உஸ்மான் டெம்பலே ஹாட்ரிக் கோல்: நார்வே அணியை பந்தாடியது பிரான்ஸ் | FIFA WC 2026
முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது எகிப்து | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in