அரேபிய அணிக்கு ஆடும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீராத் துயரம்

அரேபிய அணிக்கு ஆடும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீராத் துயரம்
Updated on
1 min read

போர்ச்சுக்கல் கால்பந்து மேதை வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நசர் அணி, AFC இரண்டாம் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ஜப்பானின் காம்பா ஒசாகா அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால், ரொனால்டோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் முதல் கோப்பைக் கனவு தள்ளிப் போயுள்ளது.

அதுவும் ரொனால்டோவே கோலுக்கு அருகில் இருந்து மேற்கொண்ட ஷாட் ஒன்று விரயமானதில் ரொனால்டோ ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர். ரியாத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், ஆட்டத்தின் பெரும்பகுதியில் பந்துக் கட்டுப்பாடும் தாக்குதல்களும் ரொனால்டோவின் வியூகத்தில் அவரது அணியான அல் நசரின் வசமாக இருந்தபோதிலும், அந்த அணி கோல் அடிக்க முடியாமல் தவறியது. மறுபுறம், காம்பா ஒசாகா தனது ஒரே இலக்கை நோக்கிய ஷாட்டிலேயே வெற்றி கோலை பதிவு செய்தது.

போட்டியின் 29-வது நிமிடத்தில் டெனிஸ் ஹும்மெட் (Deniz Hümmet) பெனால்டி பகுதியின் விளிம்பில் இருந்து திரும்பி அடித்த தாழ்வான ஷாட், கோல் வலையின் கீழ்மூலையில் புகுந்தது. ஆஃப்சைட் சந்தேகத்தின் காரணமாக VAR பரிசோதனை நீண்ட நேரம் நடைபெற்றாலும், இறுதியில் கோல் அங்கீகரிக்கப்பட்டது. 2022 டிசம்பரில் அல் நசரில் இணைந்த ரொனால்டோவுக்கு, இது அந்த அணியுடன் சந்தித்த நான்காவது இறுதிப்போட்டித் தோல்வியாகும். இதுவரை அவர் வென்ற ஒரே இறுதிப்போட்டி 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அராப் கிளப் சாம்பியன்ஸ் கப் மட்டுமே. அது அதிகாரப்பூர்வமற்ற தொடராகக் கருதப்படுகிறது.

இந்தத் தோல்வி, ஐந்து நாட்களுக்கு முன் சவுதி ப்ரோ லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பையும் அல் நசர் இழந்ததையடுத்து வந்துள்ளது. கடைசி நொடிகளில் விட்டுக்கொடுத்த கோலால் பட்டப் போட்டி இறுதி சுற்று வரை தள்ளிப்போனது. இறுதிப்போட்டியின் முதல் பாதியில் அல் நசர் பல வாய்ப்புகளை உருவாக்கியது. இடைவேளைக்கு முன், கிறிஸ்டியானோ ரொனால்டோ, சக வீரர் ஜோவோ ஃபெலிக்ஸ் கொடுத்த அற்புதமான கிராஸ் பந்தைத் தலையால் முட்டிக் கோலாக்க முயன்றார்.

ஆனால் கோல் போஸ்ட்டுக்கு மிக அருகிலிருந்து அந்த முயற்சியை மேற்கொண்டாலும் ரொனால்டோவுனால் கோலாக மாற்ற முடியாமல் பந்து கோல் கம்பத்தைத் தாண்டிச் சென்றது. பின்னர், போட்டி முடிவிற்கு 13 நிமிடங்கள் இருக்கும் போது, மீண்டும் ஜோவோ ஃபெலிக்ஸ் வெளியிலிருந்து அடித்த தாழ்வான ஷாட் கோல் கம்பத்தில் மோதி திரும்பியது. அதனால் அல் நஸ்ரின் சமநிலை வாய்ப்பும் வீணானது. இதன் மூலம், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அல் நசர் அணி ஆகியோர்களின் பெரும் கோப்பை வெற்றி கனவு மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

அரேபிய அணிக்கு ஆடும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீராத் துயரம்
டி20 போட்டிகளில் 3,000 ரன்கள் - சாய் சுதர்ஷன் சாதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in