

போர்ட் ஆவ் பிரின்ஸ்: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்றுள்ள ஹைதி கால்பந்து அணி வீரர்களின் சீருடையில் அந்நாட்டின் சுதந்திரப் போர் தொடர்பான படம் இடம்பெற்றிருந்தது.
இதற்கு உலக கால்பந்து சம்மேளனம் (பிஃபா) ஆட்சேபம் தெரிவித்ததால் சட்டையிலிருந்த புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நேற்று அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் தொடங்கியது. இந்தப் போட்டியில் பங்கேற்க கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைதியும் தகுதி பெற்றுள்ளது.
ஹைதி வீரர்கள் அணிந்திருந்த சட்டையில், ஹைதி நாட்டின் சுதந்திரப் போர் தொடர்பான புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இது பிஃபாவின் விதிகளை மீறிய செயல் என்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டையிலிருந்த புகைப்படத்தை நீக்கிவிட்டு புதிய சட்டை தயாரிக்கப்பட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
ஹைதி வீரர்களுக்கு கொலம்பியாவைச் சேர்ந்த விளையாட்டு உபகரணங்கள், சட்டை, கால் சட்டைகள் தயாரிக்கும் நிறுவனமான சயேட்டா நிறுவனம் தயாரித்துள்ளது. இதுதொடர்பாக சயேட்டா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, “ஹைதி வீரர்களுக்கான கால்பந்து சீருடையை, ஹைதி கால்பந்து சம்மேளனத்துடன் இணைந்து உருவாக்கினோம்.
ஹைதி மக்களின் பெருமை, மன உறுதி மற்றும் மனப்பான்மை ஆகியவற்றை கொண்டாடும் விதமாக தயாரிக்கப்பட்டது. இதற்கு பிஃபா ஆட்சேபம் தெரிவித்ததால் அதை மாற்றி விட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது.