

சாப்மேன், ஜாக் ஃபோல்க்ஸ்
ஆக்லாந்து: இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 தொடர் வரும் 22-ம் தேதி கிறைஸ்ட்சர்ச் நகரில் தொடங்குகிறது.
இந்நிலையில் டி20 தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மார்க் சாப்மேன், மிதவேகப்பந்து வீச்சாளரான ஜாக் ஃபோல்க்ஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர்.
கடந்த மாதம் ஐரோப்பிய டி20 லீக் தொடரில் விளையாடிய போது இடது தொடையில் மார்க் சாப்மேன் காயம் அடைந்திருந்தார். வேகப்பந்து வீச்சாளர் ஜாக் ஃபோல்க்ஸ், கேன்டர்பரி அணிக்காக பயிற்சியில் ஈடுபட்ட போது வலது இடுப்புப் பகுதியில் காயம் அடைந்தார்.
காயத்தில் இருந்து குணமடைந்து வரும் 32 வயதான இடது கை பேட்டரான சாப்மேன், இதுவரை 113 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஃபோல்க்ஸ் எப்போது மீண்டும் அணிக்கு திரும்புவார் என்பது உறுதியாகவில்லை. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ள இவர்கள் இருவருக்கும் பதிலாக ஆல்ரவுண்டர் ஜோஷ் கிளார்க்சன், வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.