

அகமதாபாத்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறார். டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா கடந்த 18 மாதங்களாக தனது அதிரடி பேட்டிங்கால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருந்தார்.
ஸ்டிரைக் ரேட் 192+ வைத்துள்ள அவர், பவர்பிளேவில் எதிரணியின் பந்து வீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால், நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவர், 3 ஆட்டங்களிலும் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் அலி கான் பந்துவீச்சில் முதல் பந்திலேயே அவுட்டான அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சல்மான் அலி ஆகா பந்துவீச்சிலும், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆர்யன் தத் பந்துவீச்சிலும் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார்.
இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா இன்னும் தனது ரன் கணக்கை தொடங்காமலேயே உள்ளார். அவர் பார்மின்றி தவித்தாலும் அது இந்திய அணியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது ஒரு புறம் இருக்க அபிஷேக் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்யும் உத்திகளை எதிரணிகள் கண்டுபிடித்து விட்டனவா? அல்லது சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தொழில்நுட்ப ரீதியாக அபிஷேக் சர்மா தவறுகளை செய்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தில் பங்கேற்ற அபிஷேக் சர்மா அதன் பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர், நமீபியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் விளையாடவில்லை. மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த அவர், பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். ஆனால் இந்த இரு ஆட்டங்களிலும் அபிஷேக் சர்மா, ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆட்டமிழந்தார்.
தற்போது லீக் சுற்றுகள் முடிவடைந்து சூப்பர் 8 சுற்று தொடங்க உள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (22-ம் தேதி) தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. தொடர்ந்து ஜிம்பாப்வே, மேற்கு இந்தியத் தீவுகளையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இந்த சுற்றில் இந்திய அணி கணிசமான வெற்றிகளை குவித்தாக வேண்டும்.
நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான ஆட்டங்கள் என்பதால் அபிஷேக் சர்மா மீதான அழுத்தம் அதிகரிக்கக்கூடும். அவரது பேட்டிங்கில் பெரிய அளவிலான குறைபாடாக பார்க்கப்படுவது பேட்ஸ்விங் ஆகும். அபிஷேக் சர்மா பொதுவாக மட்டையை வலுவாக சுழற்றி ரன்கள் குவிக்கும் திறன் கொண்டவர். பெரும்பாலான பந்துகளை அவர், அதிக வலுவுடன் அடித்து விளையாடுகிறார்.
ஆனால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் மந்தமான ஆடுகளங்களில் எதிரணியினர் தொடக்கத்திலேயே சுழற்பந்து வீச்சை பயன்படுத்துகின்றனர். ஆடுகளமும் மந்தம், பந்தின் வேகமும் எதிர்பார்ப்பதை விட குறைவாக இருப்பதால் அபிஷேக்கின் பேட்ஸ்விங் அதற்கு தகுந்தவாறு அமையாததால் விக்கெட்டை விரைவாக பறிகொடுப்பதாகவும் கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே கடந்த இரு ஆட்டங்களிலும் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த விதத்தை கவனித்துள்ள தென் ஆப்பிரிக்க அணி அதற்கு தகுந்தபடி திட்டங்களை வகுக்க ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த வகையில் தொடக்க ஓவர்களை காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி ஆகியோரை கொண்டு வீசச் செய்யாமல் எய்டன் மார்க்ரம் மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஜார்ஜ் லின்டே ஆகியோரை பயன்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என தென் ஆப்பிரிக்க அணி நினைக்கக்கூடும். எனினும் கடந்த காலங்களில் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக அபிஷேக் சர்மா தடுமாற்றம் அடையவில்லை. நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் வான்கடே, கொழும்பு மற்றும் அகமதாபாத் ஆடுகளங்களின் மெதுவான தன்மையே அவரை செயலிழக்கச் செய்துள்ளது.
ஐபிஎல் அணியின் பிரபல பேட்டிங் பயிற்சியாளர் ஒருவர் கூறும்போது, “அபிஷேக் சர்மாவின் பேட்டிங்கை எதிரணியினர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. முதல் ஆட்டத்தில் அவர், டீப் எக்ஸ்டிரா கவர் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அது மோசமான பந்து. அடுத்த இரு ஆட்டங்களிலும் சுழற்பந்து வீச்சாளர்களிடம் இருந்து வந்த பந்துகள் ஒரே திசையில் சுழன்று வந்தன. அதில் பெரிதாக எதுவும் இல்லை.
இந்த ஆட்டமிழப்புகளுக்கு முன்னர், ஆஃப்-ஸ்பின்னர்கள் அபிஷேக் சர்மாவை தொடர்ந்து தொந்தரவு செய்ததற்கான எந்த தரவும் இல்லை. அவர் வழக்கமாக ஆஃப்-ஸ்பின் நன்றாக விளையாடுவார். அதில், அவரிடம் இருந்து எந்த குறையையும் பார்த்தது இல்லை” என்றார். வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களில் அபிஷேக் சர்மா தனது பேட்டிங் ஸ்விங்கால் பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்தி உள்ளார்.
தற்போது ஆடுகளத்தின் தன்மை காரணமாகவே தடுமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளார். அவரை போன்று மட்டையை வீசக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு வேகம் குறைந்த பவுன்சர்கள், கட்டர்கள், நக்குல் பந்துகள் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். அபிஷேக் சர்மா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்வது இதுவே முதன்முறை.
இந்த விஷயத்தில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தொழில் நுட்ப ரீதியாகவும், மனரீதியாகவும் அபிஷேக் சர்மாவை பலப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். இதை இறுகப்பற்றி அபிஷேக் சர்மா மீண்டும் ரன் வேட்டைக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.
அபிஷேக்கால் கவலையா?
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் கூறும்போது, “அபிஷேக் சர்மாவின் பார்ம் குறித்து அணியில் விவாதிக்க வில்லை. அவர், உலகத்தரம் வாய்ந்த வீரர். அதிர்ஷ்டவசமாக அணியில் உள்ள மற்ற வீரர்கள் ரன்கள் குவித்து அவருக்கு உறுதுணையாக உள்ளனர். ஆனால் நாங்கள் இப்போது உலகக் கோப்பையின் மிக முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளோம். இதனால் அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
‘அன்று சச்சின்’
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் கடந்த 1994-ம் ஆண்டு நடைபெற்ற சிங்கர் கோப்பைக்கான முத்தரப்பு தொடரில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 4-வது ஆட்டத்தில் 8 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் 5-வது ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக 115 ரன்களை விளாசி மிரட்டினர். அதன் பிறகு நிலைமை வியத்தகு முறையில் மாறியது. இதே பாணியில் அபிஷேக் சர்மாவும் பார்முக்கு திரும்புவதற்கான வழியை கண்டறியக்கூடும்.