கம்பீருக்குப் ‘பிடித்தவர்கள்’ அணியில் தேர்வு - கேலித் தொனியில் பத்ரிநாத் விமர்சனம்

கம்பீருக்குப் ‘பிடித்தவர்கள்’ அணியில் தேர்வு - கேலித் தொனியில் பத்ரிநாத் விமர்சனம்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்காகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி குறித்து முன்னாள் இந்திய வீரரும் தமிழ்நாடு அணி வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

அவர் தன் யூடியூப் சேனலில், “பயிற்சியாளர் கம்பீருக்குப் பிடித்தவர்கள் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்” என்று கேலியாகச் சாடியுள்ளார்.

முக்கியமான தொடர்களிலெல்லாம் பும்ரா காயம் காரணமாக உட்கார்ந்து விட்டு இப்போது ஆப்கானிஸ்தன் டி20 தொடர் அணியில் ஆடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு ஆடுவது என்பது அவருக்கு ஏதோ ஐபிஎல்-க்கு முந்தைய நெட் பிராக்டீஸ் போல் ஆகிவிட்டது போலும் என்ற விமர்சனங்களும் பும்ரா மீது எழுந்துள்ளன.

ஆனால், பத்ரிநாத் பும்ராவை வம்புக்கு இழுக்கவில்லை, மாறாக நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் இருவரது தேர்வு கம்பீரின் விருப்பத்தேர்வு என்று சாடியுள்ளார்:

“மேலோட்டமாகப் பார்க்கும்போது, ​​பயிற்சியாளருக்குப் பிடித்தமானவர்களே மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளதாகத் தெரிகிறது. இந்திய கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தருக்குப் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது; அவர் அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேசமயம், நிதிஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சுத் திறனை நான் அவ்வளவாக உயர்வாகக் கருதவில்லை. அவர் அடிப்படையில் ஒரு பேட்டர் மட்டுமே; பந்துவீச்சாளராக அவரை நான் அந்த அளவுக்குச் சிறந்தவராகக் கருதவில்லை.

பும்ராவின் வருகை ஒரு மிகப்பெரிய சாதகமான விஷயம். ஒருவேளை, இந்த மூன்று போட்டிகளிலும் விளையாட விரும்புவதாகப் பும்ரா நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கலாம்; அப்படிச் சொல்லியிருந்தால் அவர்கள் அவரைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும். அது நமக்குத் தெரியாது.

நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடாததால், தான் விளையாட விரும்புவதாக அவர் கம்பீர் அல்லது தேர்வுக் குழுவிடம் பேசியிருக்கலாம். எனவே, இது பும்ராவின் விருப்பமாகக்கூட இருந்திருக்கலாம்.” இவ்வாறு கூறியுள்ளார் பத்ரிநாத்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் [கேப்டன்], அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் [விக்கெட் கீப்பர்], இஷான் கிஷன் [விக்கெட் கீப்பர்], திலக் வர்மா [துணை கேப்டன்], சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.

கம்பீருக்குப் ‘பிடித்தவர்கள்’ அணியில் தேர்வு - கேலித் தொனியில் பத்ரிநாத் விமர்சனம்
26/6-ல் இருந்து மீண்டெழுந்து பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு | மறக்க முடியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in