

பாகிஸ்தானுக்கு 2024-ல் பயணம் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணி, கேப்டன் நஜ்முல் ஹசன் ஷாண்ட்டோ தலைமையில் பாகிஸ்தானை 2வது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி 2-0 என்று டெஸ்ட் தொடரில் கிளீன் ஸ்வீப் செய்து முதன் முதலாக பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்த தினம் இன்றுதான்.
முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம், இரண்டாவது டெஸ்டிலும் வென்று பாகிஸ்தானை 2-0 என வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
ராவல் பிண்டி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 274 ரன்கள் எடுத்தது. சயீம் அயூப், கேப்டன் ஷான் மசூத், சல்மான் ஆகா ஆகியோர் அரைசதம் எடுத்தனர். வங்கதேசத் தரப்பில் அட்டகாச ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை வெறும் 61 ரன்களுக்குக் கைப்பற்றினார்.
பிறகு முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேச அணி ஒரு கட்டத்தில் 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. பின்னர் லிட்டன் தாஸ் (138) மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் (78) இணைந்து அணியை மீட்டெடுக்கத் தொடங்கினர். முதல் இன்னிங்ஸில் ஏற்கெனவே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த மெஹிதி ஹசன், லிட்டனுடன் இணைந்து 165 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் 50 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த பிறகு ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை வங்கதேசம் படைத்தது; அந்த அணி 262 ரன்களை எட்டியது.
லிட்டன் தாஸ் அபாரமான சதம் விளாசி அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினார். 6-வது இடம் அல்லது அதற்குக் கீழே களமிறங்கி, அணி 50 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அவர் அடித்த மூன்றாவது சதம் இதுவாகும். இதனால் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் முன்னிலை வெறும் 12 ரன்களாக மட்டுமே குறைந்தது. அதாவது 26/6லிருந்து கோட்டை விட்ட பாகிஸ்தான் லிட்டன் தாஸ், மெஹதி ஹசனிடம் பிடியை இழந்து 262 ரன்கள் வரை எடுக்க விட்டது.
இதோடு இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வங்கதேசத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான 21 வயது நஹித் ராணா மற்றும் 24 வயது ஹசன் மஹ்மூத் ஆகியோர் பாகிஸ்தானின் பேட்டிங் வரிசையை சிதறடித்தனர். இருவரும் தங்களது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி பாகிஸ்தானின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் 172 ரன்களுக்குச் சுருண்டது.
வங்கதேசத்துக்கு வெற்றி பெற 185 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை வங்கதேசத்தின் முன்னணி பேட்டர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் விரட்டிப் பிடித்தனர். இதன் மூலம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே 2-0 என வீழ்த்திய வங்கதேசம், வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது மூன்றாவது முறையாகும்.
26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையிலிருந்து எழுந்து, தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசத்தின் மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றிகளில் ஒன்றாக மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டின் மறக்க முடியாத மீள்வெற்றிகளில் ஒன்றாகவும் இன்றளவும் குறிப்பிடப்படுகிறது.