

சென்னை: ஆஸ்திரேலியாவை வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான நம்பகமான கூட்டாளியாகவும், கல்வி மற்றும் சுற்றுலாவுக்கான முன்னணி நாடாகவும் இந்தியர்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கில், ஜி டே நமஸ்தே என்ற பெயரில் ஒரு வார காலத் திருவிழாவை ஆஸ்திரேலியா நடத்துகிறது.
இந்தத் திருவிழா டிசம்பர் 7 முதல் 12-ம் தேதி வரை இந்தியாவின் 6 நகரங்களில் நடைபெற உள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, நாகாலாந்தின் கோஹிமா ஆகிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் நிறைவாக டிசம்பர் 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிக்பாஷ் டி 20 தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது. இதில் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன், துணைத் தூதர் சிலாய் ஜாகி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஸ்ரீனிவாச ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.