

லாகூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டி நேற்று லாகூரிலுள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. சயீம் அயூப் 40, பாபர் அஸம் 24, கேப்டன் சல்மான் அலி ஆகா 39, உஸ்மான் கான் 18, முகமது நவாஸ் 15 ரன்கள் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிராவிஸ் ஹெட் 23, கேமரூன் கிரீன் 36, சேவியர் பார்ட்லெட் 34ரன்கள் சேர்த்தனர். இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலா 2-வது டி20 போட்டி லாகூர் மைதானத்தில் நாளை (ஜனவரி 31) நடைபெறவுள்ளது.