

டர்பன்: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் இந்தப் போட்டி கடந்த 9-ம் தேதி தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் மேட் ரென்ஷா குவித்த 190 ரன்களால் 390 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று 3-ம் நாள் ஆட்டத்தை அந்த அணி தொடர்ந்து விளையாடியது.
டேவிட் பெடிங்ஹாம் 49, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32, வியான் முல்டர் 30, மார்கோ யான்சன் 26, சைமன் ஹார்மர் 35, கேசவ் மகராஜ் 34, அனிரிச் நோர்க்கியா 16 ரன்கள் சேர்த்தனர்.
78 ஓவர்களில் 284 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழக்க முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 3, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன் ஆகியோர் தலா 2, பியூ வெப்ஸ்டர் ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் 106 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி விளையாடியது. 5.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா 33 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நிக் மேடின்சன் 17, டிராவிஸ் ஹெட் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.