

வங்கதேசம் ஆஸ்திரேலியாவை டார்வின் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசத்தில் மகிழ்ச்சி அலைகளை உருவாக்க ஆஸ்திரேலியாவிலோ மாற்றுக் காட்சியாக கேப்டன் கமின்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்ததில் போய் முடிந்துள்ளது.
மராரா மைதானத்தில் பிரஸ் மீட்டில் அமர்ந்த பாட் கமின்ஸ் அதிர்ச்சியில் உறைந்து போனவராகக் காணப்பட்டார். பாட் கமின்ஸ் 39 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகப் பணியாற்றியுள்ளார் 9 முறைதான் தோற்றுள்ளார், ஆனால் இந்தத் தோல்வியை ஆஸ்திரேலியர்கள் மிகவும் இழிவானதாகக் கருதுகின்றனர் என்பதே அதில் உள்ள விஷயம்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக ஷமார் ஜோஸப்பின் அற்புத ஸ்பெல்லில் தோற்றபோது கூட பாட் கமின்ஸ் இவ்வளவு அதிர்ச்சிக்குள்ளானவராகக் காணப்படவில்லை.
இதில் பெருத்த அவமானம் என்னவெனில் 23 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் விளையாட அழைக்கப்படாது ஒழிக்கப்பட்ட ஒரு அணி திடீரென வந்து தொழில்நேர்த்தியுடன் ஆடி ஆஸ்திரேலியாவை மண்ணைக் கவ்வச் செய்ததுதான் ஆஸ்திரேலியர்களால் தாங்க முடியவில்லை. SENA என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் வங்கதேசம் 26 டெஸ்ட்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.
இவ்வளவு ஏன்? ஜிம்பாப்வேவுக்கு எதிராக 3 நாட்களுக்குள் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்த அணி வங்கதேசம். இந்தத் தொடரிலேயே 3 நாள் டூர் மேட்சில் 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் படுதோல்வி அடைந்திருந்தது. இந்த அணியிடம் போய் தோற்கலாமா என்பதே இப்போது ஆஸ்திரேலியாவில் பெரும் விவாதமாகக் கிளம்பியுள்ளது.
கமின்ஸ், "எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைவது நல்ல உணர்வைத் தருவதில்லை. இந்த வாரம் நாங்கள் விளையாடிய விதத்தைவிட, நாங்கள் கடைப்பிடிக்கும் தரநிலைகள் சற்று உயர்ந்தவை என்றே நான் கருதுகிறேன்."
என்று ஆஸ்திரேலிய தரம் இறங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்து அணி ஆசைப்பட்டு ஆனால் வெளிப்படுத்த முடியாதிருந்த ஆஸ்திரேலிய அணியின் பலவீனங்களை வங்கதேசம் வெளிக்கொணர்ந்துள்ளது.
இங்கிலாந்து பாஸ்பால் என்று இல்லாத ஒன்றை ஆடுவதாக சுயகற்பனையில் திளைத்து தோல்வி மேல் தோல்வியாக வாங்கிக் கட்டிக் கொள்ள வங்கதேச பேட்டர்கள் பழைய பாணி டெஸ்ட் பேட்டிங்கின் கட்டுக்கோப்பினை நடைமுறைப்படுத்தி இங்கிலாந்தின் பரம வைரிகளான ஆஸ்திரேலியாவை வீழ்த்திக் காட்டியுள்ளனர்.
ஆஸ்திரேலியா ஒரு பெரிய பீல்டிங் அணி ஆனால் அவர்களே 5 கேட்ச்களை ட்ராப் செய்தனர். பந்து வீச்சு வரிசைக்கு வயதாகி விட்டது.
ஆனால் ஆழமான பிரச்சனை என்னவெனில் மாற்றம் தேவைப்பட்டால் அவர்கள் யாரை நாடப்போகிறார்கள் என்பதே. உள்நாட்டு அளவில் அதிக ரன்களைக் குவிக்கும் இளம் பேட்டர்களின் பற்றாக்குறை குறித்து விவாதிக்க, ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் குழுவினர் இரு வாரங்களுக்கு முன்பு பிரிஸ்பேனில் மாநிலப் பயிற்சியாளர்களைச் சந்தித்தனர். பிரச்சனை இப்படியிருக்க நாம் முன்பே குறிப்பிட்டது போல் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டும் சரிவை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது போலும்.