“கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை கேளுங்கள்” - ரஹானேயின் அதிருப்தி

“கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை கேளுங்கள்” - ரஹானேயின் அதிருப்தி
Updated on
1 min read

ரூ.25.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் பவுலிங் வீசவில்லை என்பதன் காரணம் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. ஆம்! மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான கேகேஆர் அணியின் முதல் போட்டியில் அதிவிலை கேமரூன் கிரீன் பந்து வீசவில்லை. ரஹானேவிடம் ‘க்ரீன் ஏன் வீசவில்லை?’ என்று கேள்வி எழுப்பப்பட அவரோ, ‘கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை கேளுங்கள்’ என்று அதிருப்தி மேலிட பதிலளித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு பந்துவீசாத கிரீன், கீழ் முதுகில் ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சினையிலிருந்து மீண்டு வருவதாகவும், அவர் மீண்டும் பந்துவீசத் தொடங்கும் காலக்கெடு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கேகேஆர் அணிக்குத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளது.

முதுகில் ஏற்பட்ட ஸ்ட்ரெஸ் ஃபிராக்ச்சர் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் கிரீன் செப்டம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரை 12 மாதங்களுக்குப் போட்டிகளில் பந்துவீசவில்லை. ஒரு நிலையான பந்துவீச்சுக் கூட்டணி இல்லாதது குறித்த கவலைகளுக்குப் பதிலளித்த ரஹானே, சரியான கலவையை அணி இன்னும் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறினார். "கிரீன் விரைவில் பந்துவீசத் தொடங்கும் போது, ​​கூட்டணி சற்று வித்தியாசமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

தற்போதைக்கு, நாம் சமநிலையையும், நமக்காக யார் சிறப்பாகப் பந்துவீச முடியும் என்பதையும் பார்க்க வேண்டும். பேட்டிங்கைப் பொறுத்தவரை, நான் சொன்னது போல், நாங்கள் மிகவும் சிறப்பாக பேட் செய்தோம், ஆனால் பந்துவீச்சில் அந்தச் சமநிலையைக் கண்டறிவது மிகவும் முக்கியம். எனவே, கிரீன் விரைவில் பந்துவீசத் தொடங்குவார் என்று நம்புகிறேன், அப்போது அணிக்கலவை சரியாக இருக்குமா என்பதை நாம் கண்டறியலாம்.

முதல் இரண்டு போட்டிகளில் எப்போதும் சரியான அணி சேர்க்கை அமைவதில்லை. எங்கள் பந்துவீச்சாளர்கள் காயமடைந்துள்ளதால் இது சவாலானது, ஆனால் மற்ற வீரர்கள் தங்களை வெளிப்படுத்தி, சிறப்பாகச் செயல்பட்டு, தமக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன்.

நான் சொன்னது போல், கார்த்திக், வைபவ், முசரபானி, சௌரப் துபே ஆகியோர் உள்ளனர்; உம்ரான் மாலிக் இருக்கிறார். பயிற்சி அமர்வுகள் மற்றும் பயிற்சிப் போட்டிகளின் போது மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் செயல்பட்டு வரும் நவதீப் சைனியும் இருக்கிறார். எனவே இது அனைவருக்கும் ஒரு வாய்ப்பு.”

இவ்வாறு கூறினார் ரஹானே.

“கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை கேளுங்கள்” - ரஹானேயின் அதிருப்தி
சட்டப்பேரவைத் தேர்தல் சுவாரஸ்யம்: ஜெ. பாணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in