சட்டப்பேரவைத் தேர்தல் சுவாரஸ்யம்: ஜெ. பாணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்

சட்டப்பேரவைத் தேர்தல் சுவாரஸ்யம்: ஜெ. பாணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்
Updated on
2 min read

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட சிலர் ஒரே நேரத்தில் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தவெக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. இந்தச் சூழலில் இரண்டு தொகுதியில் போட்டியிடுவது ஏன், அதற்கான காரணம் குறித்து விஜய் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இதற்கு முன்பு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட வரலாறு குறித்து பார்ப்போம்.

1991 தேர்தலில் இரண்டு தொகுதிகளில் ஜெயலலிதா போட்டி: 1989-ல் போடிநாயக்கனூரில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்றார். அப்போது இரண்டு அணிகளாக அதிமுக பிரிந்திருந்தது. அதிமுக (ஜெ) அணிக்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார்.

அதன்பின்னர், 1991 பேரவைத் தேர்தலில் காங்கயம் தொகுதியில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். அது அவருக்கு இரண்டாவது பேரவைத் தேர்தலாக அமைந்தது. காங்கயத்தில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பர்கூர் தொகுதியிலும் தான் போட்டியிட உள்ளதாக அந்த ஆண்டு ஏப்.18-ம் தேதி அன்று அறிவித்தார். “எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. அதனால் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் நான் வெற்றி பெறுவேன். இருப்பினும் சில அறிக்கைகளை காரணமாக பாதுகாப்பு கருதி பர்கூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்” என அப்போது இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு ஜெயலலிதா பதில் தந்திருந்தார்.

அதற்கடுத்த சில நாட்களில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பரப்புரையின் போது ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. காங்கயம், பர்கூர் என இரண்டு தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றார். பின்னர் காங்கயம் தொகுதி எம்எல்ஏ பொறுப்பை ராஜினாமா செய்தார்.

ஆனால், 1996 பேரவைத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா தோல்வி அடைந்தார்.

பின்னர் 2001 பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலில் வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட மட்டுமே மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் வாய்ப்பளிக்கிறது. இருப்பினும் சட்ட ரீதியான சிக்கல்களை திசை திருப்பும் நோக்கில் அவர் நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தகுதி நீக்க நடவடிக்கையை அப்போது அவர் எதிர்கொண்டார். இருப்பினும் 132 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

அதே தேர்தலில் வால்பாறை மற்றும் ஓட்டப்பிடாரம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் தோல்வி அடைந்தார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி.

அதற்கடுத்து நடைபெற்ற அச்சரப்பாக்கம், சைதாப்பேட்டை, வாணியாம்பாடி இடைத்தேர்தலில் திமுக முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவம், அந்த 3 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

1980-ல் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஆண்டிப்பட்டி மற்றும் மதுரை மேற்கில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதே தொகுதிகளில் அதிமுக சார்பில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் எம்ஜிஆர் ஆண்டிப்பட்டி தொகுதியிலும், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மதுரை மேற்கு தொகுதியிலும் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். இருவரும் அந்தத் தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

இவ்வாறாக கடந்த கால தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முக்கியத் தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்த சம்பங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், தான் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே இரண்டு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவது கவனம் பெற்றுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் சுவாரஸ்யம்: ஜெ. பாணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக விஜய் போட்டி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in