

புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் கடந்த 2024-ல் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதி சுற்று வரை முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக கடைசி நேரத்தில் அவரது உடல் எடை 50 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் மல்யுத்த போட்டிகளில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ள அவர், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வகையில், மீண்டும் மல்யுத்த போட்டியில் களமிறங்க உள்ளார். இதற்காக உத்தரபிரதேச மாநிலம் கோண்டா நகரில் இன்று (10-ம் தேதி) நடைபெற உள்ள சீனியர் ரேங்கிங் தொடரில் 57 கிலோ எடைப்பிரிவில் களமிறங்குகிற வினேஷ் போகத் முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் வினேஷ் போகத் இந்த தொடரில் பங்கேற்க தடை விதித்துள்ளது. எந்தவொரு வீரர், வீராங்கனையும் ஓய்வு முடிவை திரும்ப பெற்று மீண்டும் போட்டியில் பங்கேற்க விரும்பினால் அதனை உலக மல்யுத்த கூட்டமைப்பு, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பிடம் 6 மாதத்துக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
மேலும் தன்னை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறைகளை வினேஷ் போகத் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. இந்த விதிமுறை சிக்கல்களால் அவர், வரும் ஜூன் 26-ம் தேதி வரை எந்தவொரு உள்நாட்டுப் போட்டியிலும் விளையாட முடியாது என இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு வினேஷ் போகத்துக்கு 15 பக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.