

மிர்பூர்: வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 85 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 301 ரன்கள் குவித்தது. முஸ்பிகுர் ரகிம் 48, லிட்டன் தாஸ் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 117.1-வது ஓவரில் 413 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. முஸ்பிகுர் ரகிம் 179 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 71 ரன்களும், லிட்டன் தாஸ் 67 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மெஹிதி ஹசன் மிராஸ் 10, தைஜூல் இஸ்லாம் 17, எபாதத் ஹோசைன் 0, தஸ்கின் அகமது 28 ரன்களில் நடையை கட்டினர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அப்பாஸ் 5, ஷாகின் ஷா அப்ரிடி 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
அசான் அவைஸ் 133 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 85 ரன்களும், அப்துல்லா பஸல் 78 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முன்னதாக இமாம் உல் ஹக் 72 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் மிராஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 234 ரன்கள் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.