

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவும், அமெரிக்காவின் பென் ஷெல்டனும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கிலுள்ள ஆர்தர் ஆஷ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சக நாட்டு வீரரான பிரான்சஸ் டியாபோவுடன் மோதினார்.
இதில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஷெல்டன் 4-6, 6-3, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 11-வது இடத்திலுள்ள டியாபோவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். ஒரு மணி நேரம் 17 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
2003-ம் ஆண்டில் அமெரிக்க வீரர் ஆன்டி ராடிக் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாமில் பட்டம் வென்றிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் பென் ஷெல்டன் பட்டம் வென்றால், ஆன்டி ராடிக்குக்குப் பிறகு அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமையை பென் ஷெல்டன் பெறுவார்.
மற்றொரு அரை இறுதியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஜிவேரேவுடன், ரஷ்யாவின் கரன் கச்சநோவ் மோதினார். இதில் ஜிவேரேவ் 6-3, 7-6(9), 7-6 (8) என்ற செட் கணக்கில் கரன் கச்சநோவை போராடி வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
2020-ம் ஆண்டுக்குப் பிறகு அலெக்சாண்டர் ஜிவேரேவ் முதன்முறையாக அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அலெக்சாண்டர் ஜிவேரேவ் இந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றிருந்தார்.
இந்த அமெரிக்க ஓபன் போட்டியில் பட்டம் வென்றால் இது அவருக்கு 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். மேலும், முதலாவது அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகவும் இது அமையும். கடந்த 2020-ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்று வரை முன்னேறிய ஜிவேரேவ், ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீமிடம் தோல்வி கண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாயா ஜோடி தோல்வி
அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஜூனியர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, உக்ரைனின் அன்டோனியா சுஷ்கோவா ஜோடி தோல்வி கண்டது.
நேற்று நடைபெற்ற ஜூனியர் மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அன்னிக்கா, கிறிஸ்டினா பெனிக்கோவா ஜோடி 7-6(2), 6-2 என்ற செட் கணக்கில மாயா, அன்டோனியா ஜோடியை வீழ்த்தியது.