Published : 31 May 2023 11:39 AM
Last Updated : 31 May 2023 11:39 AM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா தேவை!

ஹர்திக் பாண்டியா

லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ம் தேதி நடைபெறவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டராக அணியில் சேர்க்கப்படும்போது பவுலிங், பேட்டிங் இரண்டுமே வலுவடையும். ஏன் இந்திய அணித் தேர்வுக்குழு இந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை என்பது புரியவில்லை.

ஹர்திக் பாண்டியா 2018-க்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. அவரது காயங்கள் அவரை டெஸ்ட் அணியிலிருந்து விலக்கி வைக்க பிரதான காரணமாக இருந்தாலும், ஹர்திக் பாண்டியாவே டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவு ஆர்வம் காட்டுபவராகவும் தெரியவில்லை. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து 2-வது இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றதோடு அனைத்துப் போட்டிகளிலும் பந்து வீசினார், நல்ல வேகத்திலும் வீசியதைப் பார்க்க முடிந்தது.

தொடர்ந்து அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது பற்றி யோசிக்க வேண்டும். அவர் காயங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவரைப்போன்ற ஒரு ஆல்ரவுண்டர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டும் ஆடுவது பயனளிக்காது. இங்கிலாந்து அணி இப்போது இவரைப்போன்ற அதிரடி பேட்டர்களைத்தான் டெஸ்ட் போட்டிகளுக்கும் தேர்வு செய்து வெற்றி பெற்று வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா, இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 532 ரன்களை 1 சதம், 4 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 108. பந்து வீச்சில் 11 டெஸ்ட்களில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒருமுறை 28 ரன்கள் வழங்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

26, ஜூலை 2017-ல் இலங்கையின் கால்லேயில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா, முதல் டெஸ்ட்டிலேயே அரைசதம் கண்டார். அதுவும் 49 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என்று அசத்தினார். முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதே அறிமுகத் தொடரில் இலங்கையின் பல்லக்கிலே மைதானத்தில் ஹர்திக் 96 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 108 ரன்களை விளாசித்தள்ளினார். இந்த டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்வாறு ஹர்திக் பாண்டியாவின் டெஸ்ட் கரியர் மிகவும் பிரகாகசமாகத் தொடங்கியது. இதற்கு அடுத்த தென் ஆப்பிரிக்கா தொடரில் கேப்டவுனில் ஹர்திக் பாண்டியா ஆடிய இன்னிங்ஸ் அற்புதமானது 95 பந்துகளில் 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 93 ரன்களை எடுத்து சிங்கிள் ஆளாக இந்திய அணியை சரிவிலிருந்து தூக்கி நிறுத்தினார். இதில் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 130 ரன்களுக்கு சுருண்ட போது பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ஆனால், இந்த டெஸ்ட்டில் 208 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி வெர்னன் பிலாண்டரிடம் மடிந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பரிதாபத் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 71, கடைசியில் இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்காமில் 52 என்று ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் சரிவு கண்டார். தான் ஆடிய கடைசி இன்னிங்ஸில் டக் அடித்தார் ஹர்திக், அதன் பிறகு அவர் டெஸ்ட் போட்டிகள் பக்கம் வரவில்லை, காரணம், தொடர் காயங்கள்தான். 74 ஒருநாள் போட்டிகளில் ஹர்திக் 1584 ரன்களை எடுத்ததோடு 72 விக்கெட்டுகளை இதுவரை எடுத்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்கும் ஹர்திக் பாண்டியாவை இந்த ஒரே டெஸ்ட் போட்டிக்கு எடுத்திருக்கலாம் என்கிறார். பாண்டிங் மிகச்சரியாக ஒன்றைக் கூறுகிறார். அதாவது ஹர்திக் பாண்டியா வேகமாக வீசுகிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஹர்திக் பாண்டியா இரு அணிகளுக்குள் வித்தியாசத்தைக் காட்டக் கூடியவர், ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர் என்கிறார் ரிக்கி பாண்டிங். இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, ஹர்திக் பாண்டியாவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யலாம். ரிஷப் பந்த், இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா வந்தால் அது மிகப்பெரிய கூடுதல் பலமே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x