Published : 07 Oct 2017 10:51 AM
Last Updated : 07 Oct 2017 10:51 AM

ஒரே நாளில் 428 ரன்கள் குவித்து வங்கதேசத்தை வாட்டும் தென் ஆப்பிரிக்கா

புளூம்பாண்டேன் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் எல்கர், மர்க்கரம் சதங்களை அடிக்க தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது.

முதல் நாள் ஆட்ட முடிவில் டுபிளெசிஸ் 62 ரன்களுடனும் ஹஷிம் ஆம்லா 89 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

86-வது ஓவரில் 2-வது புதிய பந்தை முஷ்பிகுர் ரஹிம் கேட்ட போது அடி வாங்கி அடி வாங்கி நொந்து நூலான 85 ஓவர்கள் வீசப்பட்ட பழைய பந்துக்கு மனதென்று ஒன்றிருந்தால் குதூகலித்திருக்கும், அதே வேளையில் புதிதாக அடி வாங்க வரும் புதிய பந்தைப் பார்த்து ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்திருக்கும் அல்லது ஈனஸ்வரத்தில் நன்றி ஒன்றையும் உதிர்த்திருக்கும்!

கடந்த போட்டியில் சதத்தைத் தவற விட்ட மர்க்கரம், இந்தப் போட்டியில் 143 ரன்களை எடுக்க, டீன் எல்கர் 152 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 113 ரன்களை விளாசினார். முதல்நாளில் மொத்தம் 58 பவுண்டரிகளுடன் ஓவருக்கு 4.75 என்ற விகிதத்தில் ரன்கள் குவிக்கப்பட்டது.

முஸ்தபிசுர் ரஹ்மான் மட்டுமே பவுலர்களில் கொஞ்சம் பரவாயில்லை என்பது போல் வீசினார். சுபாஷிஷ் ராய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்கர் விக்கெட்டை வீழ்த்த இவர் வீசிய பந்து நல்ல ஷார்ட் பிட்ச் பந்து, ரூபல் ஹுசைன், மர்க்ரமை வீழ்த்த வீசிய இன்ஸ்விங்கர் ஆட்டத்தின் போக்குக்கு எதிராகச் சென்ற எதிர்விதி. மற்றபடி ரூபல் ஹுசைன் ஓவருக்கு 5 ரன்கள் விகிதத்தில் ரன்களை கொடுத்தார், மெஹதி ஹசனுக்குப் பதில் வந்த தைஜுல் இஸ்லாம் 19 ஓவர்களில் 98 ரன்கள் என்று சதமடிக்கத் தயாராக உள்ளார். ஒரு குறிப்பிட்ட சில தருணங்களில் வங்கதேச வீரர்கள் எனர்ஜியுடன் வீசினர், இதில்தான் ஷார்ட் பிட்ச் பந்துகளின் விளைவாக எல்கர் ஆட்டமிழந்தார், மர்கரமுக்கு தொடர் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசிய ரூபல் ஹுசைன் பிறகு ஒரு இன்ஸ்விங்கரை வீசி வீழ்த்தினார். மற்றபடி சாத்துமுறைதான் தொடர்ந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முஷ்பிகுர் ரஹிம் முடிவெடுத்ததை கிண்டல் செய்யும் விதமாக டுபிளெசிஸ், முதலில் பேட் செய்ய முடியாத அளவுக்கு இந்தப் பிட்சில் ஒன்றுமில்லை என்றார். முஷ்பிகுர் ரஹிம் முதல் 6 ஓவர்களில் 4 பவுலர்களைப் பயன்படுத்தி தனது முதிர்ச்சியின்மையைக் காட்டினார்.

பவுமா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த 3 விக்கெட்டுகள் தவிர வங்கதேசத்துக்கு முதல் நாள் ஆட்டத்தில் சொல்லிக் கொள்ள எதுவுமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x