Last Updated : 15 Oct, 2017 11:57 AM

 

Published : 15 Oct 2017 11:57 AM
Last Updated : 15 Oct 2017 11:57 AM

ஆசிய கோப்பை ஹாக்கி: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா - பாகிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

10-வது ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வங்கதேச தலைநகரான டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான கொரியா, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்தத் தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், 2-வது ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தையும் வீழ்த்தியது.

இந்த இரு வெற்றிகளின் மூலம் 6 புள்ளிகளுடன் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் தனது 3-வது ஆட்டத்தில் இந்திய அணி இன்று பரம வைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 7-0 என வென்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் ஜப்பானுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்தில் உள்ளது.

பெனால்டி கார்னர்

அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்றைய ஆட்டத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. பாகிஸ்தானை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டபடி சூப்பர் 4 சுற்றில் காலடி எடுத்து வைக்கும். இந்தத் தொடரின் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி கோல் மழை பொழிந்துள்ளது. இந்திய வீரர்கள் அதிக அளவில் பீல்டு கோல்களை அடித்துள்ளது ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் பெனால்டி கார்னர்களை வீணடிப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கு 13 பெனால்டி கார்னர்கள் கிடைத்தன. ஆனால் இவற்றில் இரண்டை மட்டுமே இந்திய வீரர்கள் கோலாக மாற்றினர். இதனால் பெனால்டி கார்னர் விஷயத்தில் இந்திய வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பாகிஸ்தானுக்கு எதிராக மோதுவதால் இன்றைய ஆட்டம் புதிய பயிற்சியாளர் மரிஜினுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றால் எப்போதும் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும். இம்முறையும் அதற்கு பஞ்சம் இருக்காது. 4 முறை உலக சாம்பியன், 3 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி உலகளவில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இல்லை. ஆனால் இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளதால் அந்த அணி கூடுதல் உத்வேகத்துடன் உயர் மட்ட அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது.

கடைசியாக இரு அணிகளும் கடந்த ஜூன் மாதம் லண்டனில் நடைபெற்ற ஹாக்கி உலக லீக் அரை இறுதியில் 5 முதல் 8-வது இடங்களுக்கான ஆட்டத்தில் மோதின. இதில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. இந்த தோல்வியால் அடுத்த ஆண்டு புவனேஷ்வரில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி வெற முடியாமல் போனது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

நேரம்: மாலை 5.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x