Published : 02 Oct 2017 06:41 AM
Last Updated : 02 Oct 2017 06:41 AM

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: பாக். 422 ரன்கள் குவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 422 ரன்களைக் குவித்தது.

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 419 ரன்களை எடுத்தது. அந்த அணியில் தினேஷ் சந்திமால் 155 ரன்களைக் குவித்து கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்தார். கருணாரத்னே 93 ரன்களையும் திக்வெலா 83 ரன் களையும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி, 3-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களை எடுத்திருந்தது. அசார் அலி 74 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அசார் அலி 85 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் விக்கெட்கள் ஒருபுறம் அடுத்தடுத்து விழுந்தாலும் மறுபுறம் உறுதியாக நின்று பேட்டிங் செய்த ஹாரிஸ் சோகைல் 161 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர் களுடன் 76 ரன்களைக் குவித்தார். இதனால் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 422 ரன்களைக் குவித்து ஆட்டம் இழந்தது. இலங்கை அணியில் ஹெராத் 93 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இலங்கையின் 2-வது இன்னிங்ஸில் கருணாரத்னே 10, குஷால் சில்வா 25, திருமன்னே 7, சந்திமால் 7 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதனால் நேற்று ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்களை எடுத்திருந்தது. மெண்டிஸ் 16 ரன்களுடனும், லக்மால் 2 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x