Published : 08 May 2023 03:23 PM
Last Updated : 08 May 2023 03:23 PM

ரசிகர்களுக்காக வேண்டி தன்னலமற்றவராக இருப்பதை தோனி நிறுத்திக்கொள்ள வேண்டும்!

தோனி | கோப்புப்படம்

‘திரை தீ பிடிக்கும்
வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்’
எனும் திரைப்பட பாடல் வரிகள் அப்படியே கச்சிதமாக பொருந்திப் போகும் ஒரு நபர் என்றால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிதான். அவரது ஆட்டத்தை மைதானம், தொலைக்காட்சி, ஓடிடி ஸ்ட்ரீமிங் தளம் என அனைத்து தளங்களிலும் பார்க்க டிமாண்ட் அதிகம். அதற்கு நடப்பு ஐபிஎல் சீசனையே உதாரணமாக சொல்லலாம். அதுவும் அவர் பேட் செய்ய வருகிறார் என்றால் போதும், அவருக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு தனித்துவ மிக்கதாக இருக்கும். ‘தோனி, தோனி’ என ரசிகர்களின் முழக்கம் வழக்கத்தை காட்டிலும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

அவர் களம் காணும்போது தங்கள் செல்போனில் அந்தக் கண்கொள்ளா காட்சியை அப்படியே படம் பிடித்து ‘தல தரிசனம்’ என ஸ்டேட்டஸ் வைப்பது ரசிகர்களின் வழக்கம். ‘ஜெயிக்குறோமோ, தோக்குறோமோ அவர் களத்திற்கு பேட் செய்ய வந்தா மட்டும் போதும்’ என சொல்லும் தோனியின் ரசிகர்கள்தான் அதிகம். அப்படி ஒரு காந்த சக்தியை அவர் தன்வசம் வைத்துள்ளார். அவர் பேட் செய்கிறார் என்றால் பார்க்கின்ற வேலையை அப்படியே நிறுத்திவிட்டு ‘கண் கொட்டாமல்’ பார்க்கும் ரசிகர்கள் கோடான கோடி. இத்தனை இருந்தும் நடப்பு சீசனில் அவரது ஆட்டம் ‘கேமியோ’ ரகமாக அமைந்திருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே.

நடப்பு சீசனில் தோனி இதுவரை: 2023 ஐபிஎல் சீசனில் தோனி மொத்தம் 11 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதில் 7 இன்னிங்ஸ்களில் மட்டுமே பேட் செய்துள்ளார். மொத்தமாக 38 பந்துகளை எதிர்கொண்டு 76 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 200. இதில் சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தது அவரது அதிகபட்ச ரன்களாக உள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே தனது விக்கெட்டை இழந்துள்ளார். மொத்தம் 8 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

அவரையும், அவரது ஆட்டத்தையும் பார்க்க உள்ளூர், உள்நாடு மட்டுமல்லாது உலக நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் வருகின்றனர். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து அவரை பார்க்க ரசிகர் ஒருவர் வந்திருந்தார். அதே ஆர்சிபி போட்டியில் மற்றொரு ரசிகர், தன் பைக்கை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் பெங்களூரு - சென்னை ஆட்டத்தை பார்க்க வந்திருந்ததாக தெரிவித்திருந்தார். இந்த ரசிகர்கள் இருவரும் தங்கள் கைகளில் ஏந்தி இருந்த பதாகை மூலம் அதை தெரிவித்தனர். இது அனைத்திற்கும் காரணம் ரசிகர்கள் தோனி மீது வைத்துள்ள அளவு கடந்த அன்புதான்.

தோனியின் தன்னலமற்ற பண்பு ரசிகர்களை பாதிக்கச் செய்கிறதா?

நடப்பு சீசனில் தோனி நினைத்திருந்தால் முன்கூட்டியே பேட் செய்ய களத்துக்கு வந்திருக்கலாம். ஆனால் அவர் கடைசி ஓவர்களில் மட்டுமே பேட் செய்ய வருகிறார். அதுவும் 7 இன்னிங்ஸில் சிஎஸ்கே-வின் பேட்டிங் ஆர்டரில் நான்கு முறை எட்டாவது பேட்ஸ்மேனாக களம் கண்டுள்ளார். தன்னைக் காட்டிலும் தன் அணியே தனக்கு முக்கியம் என்பது தோனியின் எண்ணம். ஆனால், அவரது ரசிகர்களின் எண்ணம் வேறு வகையில் உள்ளது.

சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்கும்போதெல்லாம் ‘தோனி.. தோனி’, ‘We Want தோனி’ எனவும் ரசிகர்கள் முழக்கம் இடுகின்றனர். களத்தில் நிலைத்து நின்று சிறப்பாக ரன் சேர்த்து ஆட்டமிழக்கும் சென்னை பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பும் போதும் இதே நிலைதான்.

அப்படிப்பட்ட சூழலில் பேட் செய்ய வரும் தோனியும் சிக்ஸர் விளாசி ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கிறார். கடந்த சில சீசன்களை போல இல்லாமல் நடப்பு சீசனில் தோனி சிறப்பாகவே பேட் செய்து வருகிறார். களத்தில் சில நிமிடங்கள் மட்டுமே பேட் செய்தாலும் பந்தை ‘காட்டடி’ அடிக்கிறார். அதுவும் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் பாயின்ட் திசையில் அப்பர்-கட் ஆடி சிக்ஸர் விளாசியது அபார ரகம்.

தகுதியான தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தோனியின் தார்மிகக் கடமையாகும். வரும் ஆட்டங்களில் தோனி முன்கூட்டியே பேட் செய்ய களம் காணுவார் என நம்புவோம். அதுவரை சென்னை அணி பந்து வீசும் அந்த 90+ நிமிட நேரத்தில் தோனியின் கேப்டன்சி மற்றும் விக்கெட் கீப்பீங்கை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் கொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x