மெஸ்ஸி - பிஎஸ்ஜி அணி இடையிலான உறவு முறிகிறதா? - இரண்டு வார காலம் சஸ்பெண்ட்

மெஸ்ஸி | கோப்புப்படம்
மெஸ்ஸி | கோப்புப்படம்
Updated on
1 min read

பாரிஸ்: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியை இரண்டு வார காலத்திற்கு பிஎஸ்ஜி கிளப் அணி சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவூதி அரேபியாவிற்கு தனிப்பட்ட முறையில் மெஸ்ஸி மேற்கொண்ட பயணத்தின் காரணமாக அவர் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளதாக தெரிகிறது. அவரது நீண்ட விளையாட்டு கேரியரில் முதல்முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 8 மற்றும் 13-ம் தேதி அன்று பிஎஸ்ஜி விளையாட உள்ள இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த 2021 முதல் பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். 2021 முதல் 2023 வரையில் இரண்டு ஆண்டு காலத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளது பிஎஸ்ஜி. மேலும், விருப்பத்தின் பேரில் இந்த ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பிஎஸ்ஜி அணிக்காக 54 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 21 கோல்களை பதிவு செய்துள்ளார். பிஎஸ்ஜி அணியுடனான அவரது இரண்டு ஆண்டு கால ஒப்பந்தம் வரும் ஜூனில் முடிவுக்கு வர உள்ளது.

அதே நேரத்தில் அவர் மீண்டும் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாட உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் செய்திகள் வெளிவந்தன. இதனை ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் அப்போது உறுதி செய்திருந்தன. தற்போதைய சூழலை வைத்து பார்க்கும் போது மெஸ்ஸி, தனது கிளப் அளவிலான பயணத்தை பிஎஸ்ஜி அணியுடன் தொடர்வாரா அல்லது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என ரசிகர்கள் தீவிரமாக பேசி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in