Published : 16 Sep 2017 03:21 PM
Last Updated : 16 Sep 2017 03:21 PM

கும்ப்ளே ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட விதம் என்னை பாதித்தது: மனம் திறக்கிறார் சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ப்ளே வெளியேற வைக்கப்பட்ட விதம் தன்னை பெரிதும் பாதித்தது என்று அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் தெரிவித்தார்.

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் இது குறித்துக் கூறியதாவது:

கும்ப்ளே சிறந்த, திறமையுடைய ஒரு பயிற்சியாளர். நான் விராட் கோலி, கும்ப்ளே ஆகியோருடன் பேசி கருத்து வேறுபாடுகளைக் களைய முயற்சி செய்தேன். ஆனால் கும்ப்ளே பதவியை விட்டுப் போகச்செய்த விதம் என்னை பிரச்சினைக்குள்ளாக்கியது, பாதித்தது. இருவரும் சேர்ந்திருந்தால் இந்திய கிரிக்கெட்டுக்கு அது மிகப் பிரமாதமாக அமைந்திருக்கும்.

ஆனால் சூழ்நிலைகள் கும்ப்ளேவை இருக்க விடவில்லை. ஒருமாதிரியான தர்ம சங்கடமான நிலையை கும்ப்ளே தன் பெருந்தன்மையான முடிவினால் முடிவுக்குக் கொண்டு வந்தார். அவர் ராஜினாமா செய்தார். அனில் கும்ப்ளேவுக்கு அது நல்ல காலமாக அமையவில்லை. அவர் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இல்லையெனில் அவரை விட சிறந்தப் பயிற்சியாளர் ஒருவரும் இல்லை என்றே கூறுவேன்.

நான் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கும் நிலையில் இல்லை. அமிதாப் சவுத்ரி, டாக்டர் ஸ்ரீதர் என்னை விண்ணப்பிக்கக் கோரினர். விராட் கோலியிடமும் பேசினேன். அவரும் விரும்பினார், அதனால் அப்ளை செய்தேன். ஆனால் பயிற்சியில் விருப்பமா என்று கேட்டால் நான் இல்லை என்றே கூறுவேன்.

15 ஆண்டுகள் கிரிக்கெட்டில் குடும்பத்தினரைப் பிரிந்து நிறைய இருந்தாகிவிட்டது. இப்போது பயிற்சிகாலத்திலும் ஆண்டுக்கு 7-8 மாதங்கள் குடும்பத்தை பிரிய வேண்டியிருக்கும். ஆகவே எதிர்காலத்தில் கூட நான் இனி பயிற்சிப்பொறுப்பைப் பற்றி சிந்திக்க மாட்டேன்.

மேலும் ரவிசாஸ்திரி ஒருமுறை தவறு செய்து விட்டேன், இனி செய்ய மாட்டேன் என்று கூறியதனால்தான் நான் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்தேன். சாஸ்திரி பயிற்சிப்பொறுப்புக்கு விண்ணப்பிப்பார் என்று தெரிந்திருந்தால் நான் விண்ணப்பித்திருக்கவே மாட்டேன். ஏனெனில் அவர்தான் சிறந்த தெரிவு.

ஊடகங்கள் நான் இரண்டே வரியில் விட்டேத்தியாக என் சுயவிவரத்தை அனுப்பியதாக தவறான செய்தி வெளியிட்டது, ஆனால் என் சுய விவரம் 8-10 பக்கங்கள் வரை இருந்தது.

அதில் கேப்டனும், பயிற்சியாளரும் நண்பர்கள் என்றும் கேப்டன் ஒரு சூழலில் முடிவெடுக்க முடியாமல் திணறும்போதோ, அல்லது தவறான முடிவை எடுக்கும் போதோ ஒரு அண்ணன் போன்று அவருக்கு அவருடைய முடிவு அணிக்கு நன்மை பயக்கவில்லை என்று எடுத்துரைப்பதே பயிற்சியாளரின் பணி என்று நான் என் தெரிவித்திருந்தேன்.

இவ்வாறு கூறினார் சேவாக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x