Published : 25 Apr 2023 03:02 PM
Last Updated : 25 Apr 2023 03:02 PM

பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெறாத ரஹானே இப்போது அணியில்! - 2022 ஜனவரி முதல் இன்று வரை - இது ‘கம்பேக்’ பாதை!

ரஹானே | கோப்புப்படம்

கிட்டத்தட்ட இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான ரஹானேவின் சர்வதேச கிரிக்கெட் கரியருக்கு முடிவுரை எழுதப்பட்ட நிலையில், எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியில் கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளார். பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்தத்தில் ரஹானேவின் பெயர் இல்லை. இது கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி 2022-க்கு பிறகு இந்திய அணியில் ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், அவர் கடந்து வந்த பாதையை சற்றே ரீவைண்ட் செய்வோம்.

34 வயதான ரஹானே கடந்த 2011 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று பார்மெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடி உள்ள வீரர். 2016-க்கு பிறகு டி20 கிரிக்கெட்டிலும், 2018-க்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அவர் விளையாடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரர்.

2013 மார்ச் முதல் 2022 ஜனவரி வரை இந்திய அணிக்காக ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். இதுவரை 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,931 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதங்கள் மற்றும் 25 அரைசதங்கள் இதில் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை 6 முறை வழிநடத்தி 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளும் சமனில் முடிந்துள்ளன. ஆஸ்திரேலிய நாட்டில் அந்த அணிக்கு எதிராக அவர் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது.

இருந்தும் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் தனக்கான வாய்ப்பை இழந்தார். 2022-ல் தென் ஆப்பிரிக்க தொடருக்கு பிறகு நடைபெற்ற இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் மும்பை அணிகாக நேர்த்தியாக விளையாடி வந்தார். அதில் ரன்களும் குவித்தார்.

“நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க விரும்பவில்லை. எனக்கு போட்டி நான்தான். எனது ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். எதன் பின்னும் ஓட நான் விரும்பவில்லை” என ஹைதராபாத் அணிக்கு எதிராக கடந்த டிசம்பரில் 204 ரன்கள் குவித்த போது தன்னம்பிக்கையுடன் ரஹானே பேசியிருந்தார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டார். ஐபிஎல் அரங்கில் அவர் விளையாடும் ஆறாவது அணியாக சென்னை உள்ளது. இதற்கு முன்னர் மும்பை, ராஜஸ்தான், புனே, டெல்லி, கொல்கத்தா அணிகளுக்காக அவர் விளையாடி உள்ளார். நடப்பு சீசனில் சிஎஸ்கே-வின் டாப் ஆர்டரில் களம் காணும் அவர் அதிரடி ஆட்டத்தின் மூலம் மிரட்டி வருகிறார். அவரது அணுகுமுறை வழக்கத்திற்கும் மாறான முறையில் அதிரடி ஷாட்கள் ஆடி ரன் குவித்து வருகிறார். இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து நாட்டில் 15 டெஸ்ட் போட்டிகளில் 29 இன்னிங்ஸ் விளையாடி உள்ள ரஹானே 729 ரன்கள் குவித்துள்ளார். 1 சதம் மற்றும் 5 அரை சதங்கள் இதில் அடங்கும்.

2022 ஜனவரி முதல் ரஹானே கடந்து வந்த பாதை!

  • ஜனவரி 11, 2022: இந்திய அணிக்காக கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டி
  • பிப்ரவரி 19, 2022: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெறவில்லை
  • மார்ச் 26, 2023: பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்ததில் இடம்பெறவில்லை
  • ஏப்ரல் 25, 2023: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x