Published : 25 Apr 2023 07:47 AM
Last Updated : 25 Apr 2023 07:47 AM

'திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தது சிஎஸ்கே!' - மனம் திறக்கும் ரஹானே

ரஹானே

கடந்த சீசனில் அஜிங்க்ய ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அவருக்கு 7 ஆட்டங்களில் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதில் அவர், 133 ரன்கள் சேர்த்தார். ஸ்டிரைக் ரேட் 104 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த சீசனுக்கான ஏலத்தில் ரஹானேவை கொல்கத்தா அணி விடுவித்திருந்தது. ஆனால் சிஎஸ்கே ரஹானேவை அவரது அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

அவரை ஏலம் எடுத்த போது சில எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவை அனைத்தையும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளின் வழியாக உடைத்து எறிந்துள்ளார் ரஹானே. 15 சீசன்களிலும் அவரிடம் பார்க்காத செயல்திறனை தற்போது ரசிகர்கள் கண்டு வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் ரஹானே தனது ஆட்டத்தை முற்றிலும் புதுப்பித்துக் கொண்டுள்ளதாக பாராட்டி வருகின்றனர்.

சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் அறிமுகமான ரஹானே இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 52.25 சராசரியுடன் 209 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் அவரது ஸ்டிரைக்ரேட் 199.04 என்பது சிறப்பு வாய்ந்த மற்ற பேட்ஸ்மேன்களை விட அதிகமாக உள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் அஜிங்க்ய ரஹானே கூறியதாவது:

எனது ஆட்டத்தை நான் ரசித்து விளையாடினேன், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. தோனியின் கீழ் விளையாடும் போது பல விஷயங்களை கற்றுக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு பேட்ஸ்மேன், கிரிக்கெட் வீரராக நீங்கள் எப்போதுமே முன்னேற விரும்புவீர்கள். டி20 வடிவத்துக்கு தகுந்தபடி ஒரு தனிநபராக நீங்கள் தொடர்ந்து முன்னேறி உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் உணர்கிறேன்.

போட்டிக்கு நான் தயாராகும் விதம் எப்போதும் நன்றாகவே இருந்து வருகிறது. நான் எப்போதும் என்னை மேம்படுத்திக் கொள்ளவும், ஒன்று அல்லது இரண்டு புதிய ஷாட்களை உருவாக்கவும் முயற்சித்து வருகிறேன். இப்போது நான் எனது ஷாட்களை விளையாட முடிகிறது. இதற்கு காரணம் நான் என்னை தயார் செய்து கொண்டவிதமும், சிஎஸ்கே எனக்கு கொடுத்த வாய்ப்புகளும்தான். திருப்புமுனை என்று கூற வேண்டுமென்றால் சிஎஸ்கேவில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதுதான். சிஎஸ்கே என்னை தேர்ந்தெடுத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அவர்கள், நான் விளையாடுவதற்கும் எனது திறனை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பை கொடுத்துள்ளனர். ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் எனக்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீங்கள் போட்டிகளில் விளையாடவில்லை என்றால், உங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் என்ன ஷாட்கள் உள்ளன என்பதை எப்படிக் காண்பிப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து விளையாடவில்லை என்றால் உங்கள் ஸ்ட்ரோக் மேக்கிங்கை அவர்களிடம் காட்ட முடியாது.

எனது ஆட்டம் கொல்கத்தாவுக்கு கொடுத்த பதிலடியா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை, சிஎஸ்கேவுக்கு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், என் பேட்டை பேச அனுமதித்தேன். ஒருவர் சிறப்பாக விளையாடும்போது அவர் குறித்த பேச்சுக்கள் எழுவது இயற்கைதான். மக்கள் என்னைப் பற்றி நல்லதைச் சொல்கிறார்கள், என்னைப் பற்றி நினைக்கிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனால் எனது வேலை நிகழ்காலத்தில் இருக்க வேண்டும், ஒருநேரத்தில் ஒரு போட்டியைப் பற்றி சிந்தித்து, சிஎஸ்கேவுக்கு நல்ல பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதுதான். என்னுடைய சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை என்றே நான் இன்னும் உணர்கிறேன். இந்த சீசனில் எனது ஆட்டத்தை மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன்.

நான் இதே வழியில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன், அணிக்காக தொடர்ந்து பங்களிக்க விரும்புகிறேன், என்னைப் பற்றியும், முடிவுகள் பற்றியும் அதிகம் சிந்திக்க விரும்பவில்லை. இதை செய்தாலே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். சிஎஸ்கேவுக்காக விளையாடினாலும், இந்தியாவுக்காக விளையாடினாலும் எப்போதும் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடனே விளையாடுவேன். இவ்வாறு ரஹானே கூறினார்.

34 வயதான அஜிங்க்ய ரஹானே கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்துடன் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதேவேளையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர், இந்திய அணிக்காக கடைசியாக 2016-ம் ஆண்டில் விளையாடி இருந்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் 2018ம் ஆண்டுடன் இந்திய அணியில் தனது இடத்தை இழந்திருந்தார் ரஹானே. தற்போது பேட்டிங்கில் எழுச்சி கண்டு வரும் ரஹானே, இந்த சீசனில் எஞ்சிய ஆட்டங்களிலும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு மீண்டும் கிடைப்பதற்கான தூரம் வெகுதொலைவில் இருக்காது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஈடன்கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 235 ரன்களை வேட்டையாடி இருந்தது. இந்த ரன் வேட்டைக்கு அஜிங்க்ய ரஹானேவும் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். அவர், 29 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் விளாசியிருந்தார். இந்த ஆட்டத்தில் அவர், மேற்கொண்ட சில ஷாட்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x