Published : 21 Apr 2023 02:04 PM
Last Updated : 21 Apr 2023 02:04 PM

“பர்ப்பிள் கேப் வெல்ல வேண்டும் என்ற கனவு இப்போது நனவானது” - சிராஜ் நெகிழ்ச்சி

சிராஜ்

மொகாலி: ‘நானும் ஒருநாள் பர்ப்பிள் கேப் (Purple Cap) வெல்ல வேண்டுமென்ற கனவை கொண்டிருந்தேன். இப்போது அது நிஜமானதில் மகிழ்ச்சி’ என ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர் சிராஜ் தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்பதற்கான அங்கீகாரமாக பர்பிள் கேப்பை அவர் பெற்றுள்ளார்.

“கடந்த ஐபிஎல் சீசன் நான் எதிர்பார்த்த அளவுக்கு எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. நான் செயல்படுத்த விரும்பியதை என்னால் செய்ய முடியாமல் போனது. இப்போது இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறேன். மூன்று பார்மெட்டிலும் விளையாட விரும்புகிறேன். ஆனால், அது என் கைகளில் இல்லை. எனது எண்ணம் எல்லாம் சிறப்பாக செயல்படுவதில் மட்டுமே உள்ளது. அதை செய்கிறேன். பவுலிங்கில் எனது ரிதமில் கவனம் செலுத்தி வருகிறேன்” என தினேஷ் கார்த்திக் உடனான பேட்டியில் தனுஷ் தெரிவித்துள்ளார்.

“நான் முன்பு புவனேஷ்வர் குமார் சார்பில் பர்ப்பிள் கேப் வாங்கினேன். அப்போது நானும் ஒருநாள் அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் வெல்ல வேண்டும் என கனவு கொண்டேன். அது இப்போது நடந்துள்ளது மகிழ்ச்சி” என சிராஜ் தெரிவித்துள்ளார்.

29 வயதான சிராஜ் கடந்த 2017 முதல் ஐபிஎல் அரங்கில் விளையாடி வருகிறார். முதல் சீசனை ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2018 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 71 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.

நடப்பு சீசனில் 24 ஓவர்கள் வீசியுள்ளார். அதில் 82 பந்துகள் ரன் ஏதும் கொடுக்காமல் ‘டாட்’ பந்துகளாக வீசி உள்ளார். இதில் பவர்ப்ளே ஓவர்களில் 84 பந்துகள் அவர் வீசியுள்ளார். அதில் 57 பந்துகள் டாட் பந்துகளாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x