Published : 04 Sep 2017 08:47 AM
Last Updated : 04 Sep 2017 08:47 AM

புவனேஷ் 5 விக்., கோலி 30-வது சதம்: இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி

டெஸ்ட் தொடருக்கு அடுத்தபடியாக ஒருநாள் தொடரிலும் இலங்கை அணியை 5-0 என்று வீழ்த்தி இந்திய அணி ஒயிட்வாஷ் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்புவில் நடைபெற்ற 5-வது, இறுதி ஒருநாள் போட்டியில் புவனேஷ் குமார் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் 5 விகெட்டுகளைக் கைப்பற்ற இலங்கை அணி முதலில் பேட் செய்து 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து 5-0 வெற்றியைச் சாதித்தது. கேப்டன் விராட் கோலிக்கு மீண்டும் ஒரு விரட்டல் சதம், அவர் 116 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கேதார் ஜாதவ் 73 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.

முதல்முறையாக இலங்கை அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடர் ஒயிட்வாஷைச் சந்தித்துள்ளது. கோலி இந்த விரட்டல் சதத்தின் மூலம் 2017-ல் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்துள்ளார். மேலும் ஒருநாள் சதங்கள் பட்டியலில் 30 சதங்களுடன் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்துள்ளார். பாண்டிங் 365 ஒருநாள் போட்டிகளில் சாதித்ததை கோலி 186 போட்டிகளில் சாதித்துள்ளார். விரட்டலில் கோலியின் 19-வது சதமாகும் இது.

இந்தத் தொடரில் இலங்கையின் முதல் சதக்கூட்டணியை ஆஞ்சேலோ மேத்யூஸ் (55), திரிமானே (67) ஆகியோர் சேர்க்க, அதன் மீது நல்ல ஒரு சவாலான ரன் இலக்கை இலங்கை அணியினால் நிர்ணயிக்க முடியவில்லை. 270-80 ரன்களுக்குச் செல்ல வேண்டிய இலக்கு கடைசி 7 விக்கெட்டுகளை 53 ரன்களுக்கு இழந்ததன் மூலம் 238ஆகக் குறைந்தது.

இந்தியப் பந்து வீச்சில் ஷர்துல் தாக்குரைத் தவிர மற்ற எல்லோரும் பயன்படுத்திப் பயன்படுத்தி வீணாய்ப்போன இந்த ஆடுகளத்தில் ‘நன்றாக’ வீசினர்.

ரஹானே, மலிங்காவின் அருமையான பவுன்சரை ஹூக் செய்து டாப் எட்ஜ் எடுக்க காலியானார். ரோஹித் சர்மா 16 ரன்களில் விஸ்வா பெர்னாண்டோவை ஸ்கூப் செய்ய முயன்று அவுட் ஆனார். இந்திய அணி 29/2.

இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டும் 907 ரன்களுடன் களம் கண்ட கோலி ராஜ கவர் டிரைவ்களுடன் இம்முறை கட்டுக்கோப்பான இலங்கைப் பந்து வீச்சுடன் விளையாடினார். கோலி அவர்களின் களவியூகம், பவுலிங் மாற்றம் எதையும் கண்டு கொள்ளவில்லை, இந்தப் பந்து கவர் திசையில் பவுண்டரி என்றால் அது பவுண்டரி, இந்தப் பந்து லெக் திசையில் மிட்விக்கெட்டில் பவுண்டரி என்றால் அது பவுண்டரி என்ற வகையில் ஆடினார். 9 பவுண்டரிகளையே கோலி அடித்தாலும் 239 ரன்களை எப்போது வேண்டுமானாலும் எடுப்பேன் என்பது போல்தான் அவர் ஆடினார். கேதார் ஜாதவ் 73 ரன்களில் 7 பவுண்டரிகளை அடித்தார்.

இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 109 ரன்களைச் சேர்த்தனர். ஜாதவ் 40 டாட் பால்களை கொடுக்க கோலி 49 டாட்பால்களைக் கொடுத்தார்.

கோலியின் இன்னிங்ஸ் சவால்களையே சந்திக்க வாய்ப்பில்லாமல் ஒரு ‘டெம்ப்ளேட்’ ரகமாகி வருகிறது. மணீஷ் பாண்டே 36 ரன்கள் எடுத்து ஸ்வீப் ஷாட்டை டாப் எட்ஜ் செய்தார், ஆனால் இவரும் கோலியும் இணைந்து 99 ரகக் கூட்டணி அமைத்தனர். அதன் பிறகுதான் கேதர் ஜாதவ் இறங்கி ஸ்வீப், புல் என்று ஆடி வெற்றியை விரைவில் முடிக்க உறுதி செய்தார்.

முன்னதாக இலங்கை கேப்டன் உபுல் தரங்கா 34 பந்துகளில் 48 ரன்களுடன் அருமையான ஒரு இன்னிங்ஸை ஆடினார். ஷர்துல் தாக்குரை பதம் பார்த்தார், தாக்குர் ஒன்று புல் லெந்த் இல்லையேல் ஷார்ட் பிட்ச் என்று தரங்காவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். நிரோஷன் டிக்வெல்லா, முனவீரா ஆகியோர் புவனேஷ் குமாரின் வேகம் குறைந்த பந்துக்கு வெளியேறினர். தரங்காவை அருமையான அவுட் ஸ்விங்கர் மூலம் பும்ரா வீழ்த்த இலங்கை 63/3 என்று ஆனது.

அதன் பிறகு திரிமானே, மேத்யூஸ் இணைந்து 122 ரன்களைச் சேர்த்தனர். அப்போது திரிமானே 67 ரன்களில் (102 பந்துகள்) புவனேஷ் பந்தில் பவுல்டு ஆக, 2 ஓவர்கள் சென்று மேத்யூஸ் 55 ரன்கள்ல் தோனியிடம் கேட்ச் கொடுத்து குல்தீப் யாதவ்விடம் வீழ்ந்தார். இந்த 2 விக்கெட்டுகளுக்குப் பிறகு 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 49.4 ஓவர்களில் 238 ரன்களுக்குச் சுருண்டது. புவனேஷ் குமார் 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற குல்தீப், சாஹல் ஆகியோர் சிக்கனமாக வீசி தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக புவனேஷ் குமார் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x