Published : 12 Apr 2023 04:29 PM
Last Updated : 12 Apr 2023 04:29 PM

“நாலு மேட்ச் கூட தொடர்ந்து ஆட முடியாத இவர்கள் எல்லாம் என்ன பவுலர்கள்?” - ரவி சாஸ்திரி கடும் காட்டம்

தீபக் சஹார், ஜஸ்பிரித் பும்ரா என்று இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் அடிக்கடி காயமடைந்து அணிக்கு ஆட முடியாமல் போகும் நிலை ‘நம்ப முடியவில்லை’, ‘முட்டாள் தனமாக இருக்கிறது’ , ‘வெறுப்பாக இருக்கின்றது’ என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டமாக தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அன்று சிஎஸ்கே ஆடிய போது ஒரே ஓவரைப் போட்டுவிட்டு காயமடைந்து பெவிலியன் திரும்பிய தீபக் சஹார் குறித்துத்தான் ரவி சாஸ்திரி இப்படி வெறுப்படைந்து பேசியுள்ளார்.

ரவி சாஸ்திரி கூறியதாவது, "நாம் இப்படி யோசித்துப் பார்ப்போம்: கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக சில பவுலர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியிலேயே குடிபுகுந்தவர்களாக இருக்கின்றனர். விரைவில் அவர்களுக்கு அங்கு எப்போது வேண்டுமானாலும் வரும் போகும் ‘ரெசிடண்ட் பெர்மிட்’ கிடைத்து விடும். இப்படி காயமடைவதை நம்ப முடியவில்லை. இவர்களை என்.சி.ஏ. விளையாடத் தகுதி உடையவர்கள் என்று சான்றிதழ் கொடுக்கின்றனர், கொடுத்து கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் காயமடைகின்றனர். நாலு மேட்ச்ல கூட தொடர்ந்து ஆட முடிவதில்லை, காயமடைந்து விடுகின்றனர். என்ன பவுலர்கள் இவர்கள்?

நீங்கள் யாரும் திரும்பத் திரும்ப காயமடையும் அளவுக்கு அதிக போட்டிகளில் ஆடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதற்காக என்.சி.ஏ செல்கிறீர்கள்? அங்கிருந்து வந்து 3 போட்டிகளில் ஆடிவிட்டு மீண்டும் அங்கேயே செல்வதற்கா? இது வெறுப்பாக இருக்கின்றது, இது அவர்களுக்கு மட்டும் பின்னடைவல்ல, பிசிசிஐ, அவர்கள் ஆடும் ஐபிஎல் அணிகள் என்று அனைவருக்கும் பெரிய இடர்பாடாக இருக்கின்றனர்.

சீரியஸ் காயம் என்றால் நான் இப்படிக் கூற மாட்டேன், ஆனால் 3-4 போட்டிகளில் ஆடிவிட்டு தொடையைப் பிடித்துக் கொள்வது, தோள்பட்டையைப் பிடித்துக் கொள்வது, முழங்காலை பிடித்துக் கொள்வது என்றால் என்னவென்று புரியவில்லை. இவர்கள் என்ன பயிற்சி எடுக்கின்றனர், என்னதான் நடக்கின்றது? சிலர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4 ஓவர்கள் வீசுவதைத் தவிர வேறு கிரிக்கெட் எதிலும் ஆடுவதில்லை. 3 மணி நேர ஆட்டம் மேன், கேம் ஓவர். பின் எப்படி காயம்?" என்று ரவி சாஸ்திரி காட்டமாக பொங்கிவிட்டார்.

சஹார் மட்டுமல்ல, பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் சென், மோசின் கான், யாஷ் தயால் இப்படி பட்டியல் நீள்கின்றது, இந்த ஐபிஎல் முடிவதற்குள் இன்னும் எத்தனை பவுலர்கள் காயமடைவார்களோ தெரியவில்லை.

மேலும், இந்த காய அரசியலும் பெரிய அளவில் பிரச்சனையாகும் என்று தெரிகின்றது. ஐபிஎல் ஆடுவதற்காக முழுத்தும் ஃபிட் ஆகாமலே சான்றிதழ் பெறுகிறார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. இதனால் தொடர்ந்து ஐபிஎல்-லில் கூட ஆட முடியாமல் போவதோடு, அப்படி ஐபிஎல் தொடரில் ஆடி முடித்தாலும் இந்திய அணிக்கு ஆடும்போது காயமடைந்து விடுகின்றனர். காயத்தின் உண்மையான தன்மையை, உண்மையான நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x