Published : 20 Sep 2017 11:06 AM
Last Updated : 20 Sep 2017 11:06 AM

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி ரத்து: உள்ளரங்கில் பயிற்சி பெற்றனர் ஆஸி. வீரர்கள்

கொல்கத்தாவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி நேற்று ரத்து செய்யப்பட்டது. அதேவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளரங்க மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.

இரு அணிகள் இடையே சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரு அணிகளும் நாளை 2-வது ஒருநாள் போட்டியில் மோத உள்ளன.

இந்த ஆட்டத்துக்கும் மழை அச்சுறுத்தல் எழுந்துள்ளது. நேற்று முன்தினமே இரு அணிகளும் கொல்கத்தா சென்றடைந்த நிலையில் நேற்று பயிற்சியில் கலந்து கொள்ள இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு காலையிலும் இந்திய அணிக்கு மாலையிலும் பயிற்சிக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக காலையில் பயிற்சி பெற வந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.எனினும் அவர்கள் உடனடியாக திட்டத்தை மாற்றிக் கொண்டு உள்ளரங்க மைதானத்தில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். அதேவேளையில் பந்து வீச்சாளர்கள் மட்டும் ஓட்டல் அறைக்கு திரும்பினார்கள்.

மாறாக இந்திய அணியின் பயிற்சி முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாகவும், இதனால் கொல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை இருக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (இன்று) கரையை கடக்கும் என்றும் நாளை மறுதினமும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஈடன் கார்டன் மைதானம் கடந்த இரு நாட்களாக தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. கிழக்கு மண்டல மைதான வடிவமைப்பாளர் ஆஷிஸ் பவ்மிக் கூறும்போது, “குறைந்தபட்சம் 2 மணி நேரம் சூரிய வெளிச்சம் இருந்தாலே நாங்கள் மைதானத்தை தயார் செய்துவிடுவோம். இதற்கான உபகரணங்கள் எங்களிடம் உள்ளன” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x