Published : 01 Sep 2017 02:53 PM
Last Updated : 01 Sep 2017 02:53 PM

இலங்கைக்கு எதிராக தோனி சாதனையைக் கடந்த விராட் கோலி: சுவையான தகவல்கள்

இலங்கைக்கு எதிராக வியாழனன்று அதிரடி சதம் அடித்த விராட் கோலி தனது 29-வது சதத்தை எடுத்ததோடு சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 2000 ரன்களைக் கடந்து 2076 ரன்களை எடுத்துள்ளார். இலங்கைக்கு எதிராக 2,000 ரன்களை எடுத்த 5-வது வீரராவார் கோலி.

இந்த 2000+ ரன்களை விராட் கோலி 44 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார். தோனி 45 இன்னிங்ஸ்களில் இலங்கைக்கு எதிராக 2,000 ரன்களைக் கடந்துள்ளார். ஒரு எதிரணிக்கு எதிராக குறைந்த இன்னிங்ஸ்களில் 2,000 ரன்கள் மைல்கல்லைக் கடந்ததில் சச்சின் டெண்டுல்கர் கடினமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 40 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 2000 ரன்களைக் கடந்து சாதனையை தன் வசம் வைத்துள்ளார், இவருக்கு முன்னதாக மே.இ.தீவுகள் அதிரடி மன்னன் விவ் ரிச்சர்ட்ஸ் 44 இன்னிங்ஸ்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 2,000 ரன்களை எடுத்துள்ளார்.

மேலும், விராட் கோலி 29 ஒருநாள் சதங்கள் என்பது சச்சின், ரிக்கி பாண்டிங், ஆகியோருக்கு அடுத்தபடியானதாகும். பாண்டிங் 30 சதங்களையும் சச்சின் 49 சதங்களையும் எடுத்துள்ளனர். நேற்று 29-வது சதம் அடித்த விராட் கோலி, 28 ஒருநாள் சதங்கள் எடுத்த சனத் ஜெயசூரியாவைக் கடந்துள்ளார்.

அதே போல் விராட் கோலி நேற்று எடுத்த 131 ரன்கள் இலங்கை அணிக்கு எதிராக இலங்கையில் ஒரு கேப்டன் எடுக்கும் அதிகபட்ச ரன்களாகும்.

ரோஹித்-கோலி கூட்டணி நேற்று மேற்கொண்ட இரட்டைச் சத கூட்டணி இவர்களது 3-வது கூட்டணியாகும். சச்சின் - கங்குலி, தரங்கா-ஜெயவர்தனே, கம்பீர்-கோலி ஆகியோரும் 3 முறை இரட்டைச் சத கூட்டணி அமைந்துள்ளது.

மேலும் இரட்டைச் சதக் கூட்டணியில் கோலி 10-வது முறையாக பங்களிப்புச் செய்துள்ளார். இதிலும் இவர் நம்பர் 1ஆகத் திகழ்கிறார்.

கோலியும் ரோஹித் சர்மாவும் நேற்று எடுத்த 219 ரன்கள் கூட்டணி, 2-வது விக்கெட்டுக்காக இலங்கையில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் கூட்டணியாகும். இதே தொடரில் ஷிகர் தவண்-கோலி கூட்டணி தம்புல்லாவில் 197 ரன்கள் கூட்டணியை இந்த கூட்டணி முறியடித்தது.

300 ஒருநாள் போட்டிகளில் 73 போட்டிகளில் தோனி நாட் அவுட்டாக முடிந்து சாதனை புரிந்துள்ளார், சமிந்தா வாஸ், ஷான் போலக் ஆகியோர்தான் 72 நாட் அவுட்டுகளுடன் இருந்தனர். அதை தோனி நேற்று கடந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x