Last Updated : 08 Apr, 2023 12:38 AM

 

Published : 08 Apr 2023 12:38 AM
Last Updated : 08 Apr 2023 12:38 AM

ஆழ்வார்பேட்டை டு ஐபிஎல்... பாராட்டுகளை குவிக்கும் சாய் சுதர்ஷன் யார்?

"சாய் சுதர்ஷன் பயங்கரமாக பேட்டிங் செய்கிறார். இதற்காக அவரையும், அவருக்கு உதவி செய்த பயிற்சியாளர்களையும் பாராட்டியாக வேண்டும். கடந்த 15 நாட்களாக அவர் பேட்டிங் செய்த விதமும், அவரது கடின உழைப்பையும்தான் தற்போது நீங்கள் முடிவுகளாக பார்க்கிறீர்கள். எனது கணிப்பு தப்பாக இல்லை என்றால் எப்படியும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் அவரது சிறப்பான, தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அப்படியே அது இந்திய அளவிலும் செல்லலாம்" - குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

“சாய் சுதர்ஷனிடம் கடந்த போட்டியில் பார்த்தது அவருடைய தன்னம்பிக்கையை. கடந்த ஐபிஎல் தொடரில் அவர் ஒரு சில போட்டிகளிலேயே விளையாடியுள்ளார். கிடைத்த சில வாய்ப்புகளில் 30+ ரன்களும் அடித்துள்ளார். ஆனால் இந்த வருடம் முதல் போட்டியில் பேட்டிங் செய்ய வந்தபோதே அவரிடம் தன்னம்பிக்கை இருந்தது. குறிப்பாக முதல் பந்திலிருந்தே தான் நினைக்கும் இடத்தில் அவரால் அடிக்க முடிந்தது.

கிரிக்கெட் களத்தில் சில வீரர்கள் மட்டுமே இதுபோன்ற உயர்ந்த தரத்தில் கச்சிதமாக செயல்பட்டு கவனத்தை ஏற்படுத்துவார்கள். சாய் சுதர்ஷனிடம் அனைத்து திறமைகளும் உள்ளன. நல்ல ஃபீல்டராக இருப்பதும் அவரின் கூடுதல் பலம். அதைவிட அவரின் பொறுமை மற்ற வீரர்களிடமிருந்து அவரை தனித்து காட்டுகிறது நம்புகிறேன். எனவே விரைவில் அவர் டாப் பிளேயராக வலம் வருவார்” - சுனில் கவாஸ்கர்.

இப்படி இரண்டு நாட்களாக சாய் சுதர்ஷன் குறித்த பேச்சுகளே கிரிக்கெட் தளங்களை சுற்றி. நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி பெற்ற இரண்டு வெற்றிகளிலும் சாய் ஆற்றிய பங்களிப்பே அவரை இவ்வளவு பெரிய பாராட்டுக்குரியதாக்கியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்ஷன் 48 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியில் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத். இருந்தும் பொறுப்புடன் இன்னிங்ஸை சாய் சுதர்ஷன் அணுகினார்.

குறிப்பாக, முதல் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி குஜராத் அணிக்கு அச்சுறுத்தல் கொடுத்து கொண்டிருந்தார் நோர்ட்ஜே. ஆனால், 144 கி.மீ வேகத்தில் வந்த அவரின் பந்தையும் 69 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்து அசால்ட் காட்டினார் சாய் சுதர்ஷன். சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் முக்கியமான கட்டத்தில் அவர் எடுத்த 22 ரன்கள் வெற்றிக்கு பங்களிப்பு செய்தது.

காயம் காரணமாக குஜராத் அணியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகி உள்ள நிலையில் கவனிக்கப்படும் வீரராக உருவெடுத்துள்ளார் தமிழக மண்ணின் மைந்தன் சாய் சுதர்ஷன்.

ஆழ்வார்பேட்டை டு ஐபிஎல்!: சென்னையின் முக்கிய பகுதியான மயிலாப்பூரே சாயின் பூர்வீகம். தெற்கு ஆசிய போட்டிகளில் இந்திய அணிக்காக தடகளத்தில் பங்கேற்ற தந்தை பரத்வாஜ், தமிழ்நாடு வாலிபால் அணிக்காக விளையாடிய தாயார் உஷா என விளையாட்டு பாரம்பாரியத்தை கொண்ட சாய் திருவல்லிக்கேனி ப்ரெண்ட்ஸ் அணியில்தான் முதலில் கிரிக்கெட் விளையாட தொடங்கியவர். 14 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணியிலிருந்து சாயின் கிரிக்கெட் பயணம் தொடங்கியது.

2019ல் 19வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த இவர், அதே ஆண்டில் ஆழ்வார்பேட்டை சிசி அணிக்காக பாளையம்பட்டி ஷீல்ட் ராஜா என்ற தொடரில் 635 ரன்களை குவித்து அசத்தினார். இதில் அவரின் சராசரி 52.

விஜய் ஹசாரே தொடரில் 2021ல் அறிமுகம், ரஞ்சிக்கோப்பையில் 2022ல் அறிமுகம், 2021-2022 முஸ்தக் அலி டிராபியில் அறிமுகம் என சாய் சுதர்ஷனின் கிரிக்கெட் பயணம் ஜெட் வேகத்தில் செல்கிறது என்றால் அது அவரின் திறமையினால் மட்டுமே. அறிமுக ரஞ்சிக்கோப்பையின் முதல் போட்டியில் ஹைத்ராபாத் அணிக்கு எதிராக 273 பந்துகளில் 18 பவுண்டரிகள், 1 சிக்ஸ் அடக்கம் 179 ரன்கள் என சதம் கண்டார். முதல் போட்டியில் சதம் மட்டுமல்ல, தனது அறிமுக ரஞ்சி தொடரில் 7 போட்டிகளில் மட்டும் விளையாடி 63 சராசரியுடன் 572 ரன்களை குவித்து தேர்வர்களை கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கம் திருப்பி வருகிறார்.

கைகொடுத்த டிஎன்பிஎல்: முதல் தர கிரிக்கெட் இப்படி என்றால் டி20 பக்கமும் கில்லி என அவரை நிரூபிக்க உதவியது டிஎன்பிஎல் தொடர். 2019லேயே அவரின் திறமைக்கு டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சென்னை சேப்பாக் கில்லீஸ் அணியில் முதலில் இடம்பிடித்த சாய் சுதர்ஷன் அந்த அணிக்காக களமிறங்க வாய்ப்பு உருவாகவில்லை.

எனினும், 2021ல் கோவை கிங்ஸ் அணிக்காக களமிறங்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார். முதல் போட்டியிலேயே 5 சிக்ஸர்கள் அடக்கம் 87 ரன்கள் என வான வேடிக்கை காண்பித்து டிஎன்பிஎல் தொடரிலும் ஜொலிக்க தொடங்கினார். இந்த சீசனில் மட்டும் 8 போட்டிகளில் 358 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ம் இடத்தையும் பிடித்தார் சாய்.

அப்போது, முதல் ஆட்டத்திலேயே கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்த சாய் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின், "இந்த பையன் சிறப்பானவன். உடனடியாக அவரை தமிழ்நாடு அணியில் சேர்த்துகொள்ளுங்கள். 20 ஓவர் போட்டிகளுக்கு ஏற்ற விதத்திலும் மாறிவருகிறார் சாய்" என்று பாராட்டி இருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டிஎன்பிஎல் தொடருக்கான ஏலத்தில் சாய் சுதர்ஷன் கோவை கிங்ஸ் அணியால் ரூ.21.6 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். டிஎன்பிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகை இதுவே. இதன்மூலம் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை இதன் மூலம் சாய் சுதர்ஷன் பெற்றார். ஐபிஎல் தொடரில் குஜராத் அணி சாய் சுதர்ஷனை ஏலம் எடுத்தது ரூ.20 லட்சத்துக்கே. சொல்லப்போனால் ஐபிஎல் தொடரைவிட டிஎன்பிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் கடந்த வருடம் மற்றொரு தமிழக வீரரும் ஆல்ரவுண்டருமான விஜய் சங்கர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேற, மாற்று வீரர் அடிப்படையில் குஜராத் அணியில் இணையும் வாய்ப்பு கிடைக்க, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 31 ரன்களை எடுத்து தனது வரவை அழுத்தமாக பதிவு செய்தார் சாய்.

இதுவரை விளையாடியது 7 ஐபிஎல் போட்டிகளே. இதில் 45 சராசரியுடன் 2 அரைசதங்கள் உட்பட 229 ரன்கள் அடித்துள்ளார். நடப்பு தொடரில், கவாஸ்கர் கூறியது போல், சீரான ஆட்டத்தோடு அதிரடியான ஷாட்களையும் வெளிப்படுத்தி வெற்றியை குஜராத்துக்கு வசப்படுத்தினார். இனி, வரும் போட்டிகளில் குஜராத் அணியில் முக்கிய அங்கம் வகிக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்திய அந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெற்ற பின் பேசிய சாய் சுதர்ஷன், "எனக்கு ஆதரவாக இருப்பதற்கு நன்றி. இங்கு முதன்முறையாக நிற்பதால் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நான் எண்ணினேன். ஆட்டத்தில் நான் அழுத்தமாக உணரவில்லை" என்பதே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x