Published : 11 Sep 2017 02:24 PM
Last Updated : 11 Sep 2017 02:24 PM

பணப்பற்றாக்குறை; பிசிசிஐ நிலுவைத் தொகைகள் வரவில்லை: ரஞ்சியிலிருந்து விலகுகிறது ஜம்மு காஷ்மீர்?

பிசிசிஐ-யிடமிருந்து வர வேண்டிய நிலுவைத் தொகைகள் வந்து சேராததால் கடும் பணநெருக்கடியில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் அணி வரும் சீசன் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து விலகலாம் என்று தெரிகிறது.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் மீது நிதிமுறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் 2012-ல் எழுந்ததையடுத்து அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

பிசிசிஐ-யும் தனது ஆண்டு வருவாயின் பங்கீட்டுத் தொகையை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்கு அளிக்கவில்லை.

நிலவரம் குறித்து ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கச் செயலர் இக்பால் அகமது ஷா, தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “எங்கள் வங்கிக்கணக்கை நடைமுறைக்குக் கொண்டு வரவும் சுமார் ரூ.34 கோடியைப் பயன்படுத்தவும் பிசிசிஐ-யிடமிருந்து கடிதம் தேவை, ஆனால் பிசிசிஐ அதிகாரிகளோ உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் கமிட்டியினரோ கடிதம் அளிக்கவில்லை.

முடக்கப்பட்ட நிதியை நாங்கள் பயன்படுத்த முடியாது. மார்ச் 2012 முதல் பிசிசிஐ எந்த ஒரு நிதியையும் எங்களுக்கு அளிக்கவில்லை. ஒரு சீசன் முழுதும் அணியின் செலவுகளைப் பராமரிக்க ரூ.7-8 கோடி தேவைப்படும். பிசிசிஐ விரைந்து செயல்படவில்லையெனில் அனைத்து போட்டிகளில் இல்லாவிட்டாலும் சில போட்டிகளிலிருந்து நாங்கள் விலக வேண்டிய சூழ்நிலையே ஏற்படும். எங்களுக்கு வேறு வழியில்லை.

சிஇஓ நாங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வந்ததாகக் கூட காட்டிக்கொள்ளவில்லை, பிறகுதானே பதில் அளிக்க முடியும்? உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டி பொதுக்குழுதான் முடிவெடுக்க வேண்டும் என்கின்றனர், இந்த ஒரு விவகாரத்திற்காக பொதுக்குழுவை கூட்ட முடியாது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு சில தொகைகளை சமீபத்தில் பிசிசிஐ அனுப்பிய போது பொதுக்குழு கூட்டி அனுமதி பெறவில்லை. அதே போல் ஏன் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்கும் பணப்பட்டுவாடா செய்யக் கூடாது?

இது குறித்து கருத்துக் கேட்க சிஇஓ ராகுல் ஜோஹ்ரி கிடைக்கவில்லை. பிசிசிஐ நிர்வாகிகள் கமிட்டிக்கு நெருக்கமானவர் ஒருவர் கூறும்போது, வெள்ளியன்று இந்த விஷயம் டெல்லியில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x