Published : 15 Mar 2023 03:36 PM
Last Updated : 15 Mar 2023 03:36 PM

WPL | ஆட்டத்துக்குப் பிறகு எல்லிஸ் பெர்ரி செய்யும் தூய்மைப் பணி - பாராட்டும் நெட்டிசன்கள்

சுத்தம் செய்யும் பணியில் எல்லிஸ் பெர்ரி

சென்னை: பொதுவாக விளையாட்டு வீரர்கள் அவர்களது அபாரமான கள செயல்பாடு காரணமாகவே ரசிகர்களால் போற்றப்படுவார்கள். தோனி துவங்கி மெஸ்ஸி வரை ரசிகர்கள் கொண்டாட காரணம் அவர்களது ஆட்டம்தான். அவர்களில் ஒருவர்தான் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி. களத்தில் இவரது செயல்பாடும் அபாரமாக இருக்கும். இருந்தும் நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் போட்டிகள் முடிந்த பிறகு தனது அணியின் டக்-அவுட்டை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் அவர். அதனால் இப்போது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

32 வயதான இந்த ஆஸ்திரேலிய வீராங்கனை தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 195 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரை சதங்கள் அடங்கும். 21 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளில் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார்.

ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இருந்தாலும் தனது உன்னத செயலால் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார் பெர்ரி. போட்டி முடிந்ததும் தனது அணியின் டக்-அவுட்டில் இருக்கும் வாட்டர் பாட்டில் மற்றும் கழிவுகளை அகற்றுகிறார் அவர். அந்தப் படங்களை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் வைரலாக வலம் வர செய்கின்றனர்.

“இதை நான் மட்டும்தான் செய்கிறேன் என சொல்ல மாட்டேன். களத்தில் நமக்காகவே ஒவ்வொன்றும் செய்யப்படுகிறது. ஒருவகையில் இதனை நாம் விளையாடும் இடத்திற்கு தரும் மரியாதை என்றும் சொல்லலாம்” என அவர் தெரிவித்துள்ளார். யூபி வாரியர்ஸ் அணியுடன் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஆர்சிபி அணியால் உயிர்ப்போடு வைத்துக் கொள்ள முடியும். வீடியோ லிங்க்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x