Published : 27 Sep 2017 10:20 AM
Last Updated : 27 Sep 2017 10:20 AM

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் யூனிஸ் கான், மிஸ்பா இல்லாமல் களமிறங்கும் பாக்.

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் நாளை தொடங்குகிறது. மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வுபெற்ற நிலையில் இந்த டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய அம்சமாக யூனிஸ் கானும், மிஸ்பா உல் ஹக்கும் இருந்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்களைக் குவித்தவர் யூனிஸ் கான். 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 10,099 ரன்களைக் குவித்ததுடன், ஸ்லிப்பில் நின்று பல கேட்ச்களையும் பிடித்துள்ளார். அதே போல் 75 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மிஸ்பா உல் ஹக், 10 சதங்களுடன், 5,222 ரன்களைக் குவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், இவர்கள் இருவரும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை பல போட்டிகளில் கரை சேர்த்துள்ளனர். 44 சதங்களைக் குவித்துள்ள இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 15 முறை 100 ரன்களுக்கு மேல் குவிந்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் முதுகெலும்பாகத் திகழ்ந்த இவர்களின் அபாரமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 9 தொடர்களில் ஒன்றில்கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்கள் இருவரும் சமீபத்தில் ஓய்வுபெற்ற நிலையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறது பாகிஸ்தான் அணி.

ஈடு செய்வது கடினம்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது, “அணியின் பேட்டிங் வரிசையில் முதுகெலும்பாகத் திகழ்ந்த அவர்களின் இழப்பை ஈடு செய்வது கடினம். பாகிஸ்தான் அணிக்காக அவர்கள் இருவரும் பல சாதனைகளை செய்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் தற்போது அவர்கள் இல்லாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்றார்.

முன்னணி வீரர்களின் ஓய்வால் பேட்டிங் வரிசை பலவீனமாக உள்ள நிலையில் யாசிர் ஷாவின் சுழற்பந்து வீச்சை நம்பி பாகிஸ்தான் அணி இப்போட்டியை எதிர் கொள்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன் இலங்கை அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் யாசிர் ஷா, 24 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் என்பதால் பாகிஸ்தான் அணி அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வென்று, தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ளும் எண்ணத்தில் உள்ளது. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x