Last Updated : 25 Sep, 2017 09:34 AM

 

Published : 25 Sep 2017 09:34 AM
Last Updated : 25 Sep 2017 09:34 AM

14 பந்துகளில் 8 சிக்ஸ்; 53 பந்துகளில் சதம்; மொயின் அலி அதிரடியில் இங்கிலாந்து வெற்றி

பிரிஸ்டல் மைதானத்தில் மொயின் அலி வானில் சிக்சர் தீபங்களை ஏற்ற இங்கிலாந்து 369 ரன்களைக் குவித்து பிறகு மே.இ.தீவுகளை 245 ரன்களுக்குச் சுருட்டி 3-வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்று இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

மொயின் அலி கடைசி 14 பந்துகளில் அடித்த ஸ்கோர் விவரம்: 6, 6, 2, 4, 6, 6, 6, 6, 2, 4, 1, 6, 0, 6

மொயின் அலியின் அதிரடி திகைக்க வைக்கும் அதிரடியாக அமைந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் 2-வது அதிவேக சதமாகும் இது. மொயின் அலி 50 ரன்களிலிருந்து 100 ரன்கள் செல்வதற்கு 12 பந்துகளையே எடுத்துக் கொண்டார். இதில்தான் 8 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசித்தள்ளினார்..

இவரது அதிரடி பின்னால் வந்தது என்றால் முதலில் ஜோ ரூட் (79 பந்துகளில் 84), பென் ஸ்டோக்ஸ் (63 பந்துகளில் 73), ஆகியோரும் மே.இ.தீவுகள் பந்து வீச்சில் கையை நனைத்தனர் இலக்கைத் துரத்திய போது கிறிஸ் கெய்ல் தனி மனிதராக இலக்கை விரட்டிவிடும் உறுதியுடன் ஆடினார். 78 பந்துகளில் 94 ரன்களுடன் தன் இஷ்டத்துக்கு சிக்சர்களைம் கேட்டுக் கேட்டு அடித்துக் கொண்டிருந்தார். ஆனால் ரன் ஓடுவதில் மந்தமான கிறிஸ் கெய்ல் ரன் அவுட் ஆவார் என்று எதிர்பார்த்தபடியே அடில் ரஷீத்தின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆகி வெளியேற, 176/4 என்று ஆகி 245 ரன்களுக்குச் சுருண்டது. லியாம் பிளங்கெட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மே.இ.தீவுகளால் பேட் செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து அணி ஜேசன் ஹோல்டரின் கூடுதல் பவுன்ஸிற்கு ஜானி பேர்ஸ்டோ (13) விக்கெட்டை இழந்தது. ஹோல்டரிடமே கேட்ச் கொடுத்தார். ரூட், ஹேல்சுடன் இணைந்தார். ஹேல்ஸ் 36 ரன்களில் மிகுவெல் கமின்ஸ் பந்தில் எல்.பி.ஆனார். இயன் மோர்கனின் மோசமான பார்ம் தொடர்கிறது. அவர் முதல் பந்திலேயே ஹோல்டர் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார்.

74/3 என்று இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கையில் ரூட், ஸ்டோக்ஸ் எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸை ஆடி 132 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். மேலும் அதிரடி காட்ட நினைத்த தருணத்தில் பென் ஸ்டோக்ஸ் கேட்ச் கொடுத்தார். ஆஷ்லி நர்சை தொடர்ந்து 2 சிக்சர்கள் விளாசிய ஸ்டோக்ஸ் மீண்டுமொரு சிக்சர் அடிக்கும் முயற்சியில் கேட்ச் கொடுத்தார். இதனையடுத்து ஒரு சிறு சரிவு ஏற்பட்டது. பட்லர் (2), ரூட் (79 பந்துகளில் 84) ஆகியோர் கமின்ஸ் பந்தில் வெளியேறினர். பட்லர் பந்து அருமையானது, ஆஃப் பைலை மட்டும் தட்டியது, ரூட் நேராக எல்.பி.ஆனார்.

இங்கிலாந்து 217/6 என்று தடுமாறிய போது கிறிஸ் வோக்ஸ் (34), மொயின் அலியுடன் இணைந்தார். அடுத்தடுத்த சிக்ஸ்களுடன் 41 பந்துகளில் அரைசதம் கண்டார் மொயின் அலி, இங்கிருந்துதான் தொடங்கினார் அதிரடியை. 60 ரன்களிலிருந்து 90-ஐ எட்டுவதற்கு மொயின் அலி 7 பந்துகளையே எடுத்துக் கொண்டார். சிக்சர்கள் மழை பொழிந்தது. மே.இ.தீவுகள் பவுலர்கள் புதிதாக எதையும் முயற்சி செய்யாமல் தொடர்ந்து குட் லெந்த்தில் வீசி வாங்கிக் கட்டிக் கொண்டனர்.மீண்டும் இரண்டு சிக்சர்களில் 53 பந்துகளில் சதம் கண்டு 57 பந்துகளில் 102 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து 369 ரன்களை எட்டியது. மே.இ.தீவுகள் கடைசி 2 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்தது, ஹோல்டரை வரிசையாக 3 சிக்சர்கள் அடித்தார் மொயின் அலி. ஆஷ்லி நர்ஸ் அடுத்தடுத்து 2 கேட்ச்களை மொயின் அலிக்கு விட்டார்.

தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணியில் தொடக்க அபாய வீரர் எவின் லூயிஸ், டேவிட் வில்லேயை 2 சிக்சர்கள் அடித்து இன்னொரு முயற்சியில் வெளியேறினார்.

கிறிஸ் கெய்ல் தன் இஷ்டத்துக்கு பந்துகளை வெளியே அடித்துக் கொண்டிருந்தார், மொயின் அலியை தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் அடித்து பழிதீர்த்தார்.78 பந்துகளில் 94 ரன்களூடன் அவர் ஆடிய போது ஒருவேளை 370 இலக்குடன் ஒரு மோது மோதுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் எளிதாக ஓட வேண்டிய ரன்னை தன் மந்தத்தனத்தினால் ரன் அவுட் ஆகி குட்டிச்சுவராக்கினார். கடைசியில் இங்கிலாந்து 2-0 முன்னிலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x