Published : 02 Mar 2023 04:48 PM
Last Updated : 02 Mar 2023 04:48 PM

“மற்ற அணிகளை விட அதிக டெஸ்ட் விளையாடும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸி.” - ஹோல்டர் கருத்து எத்தகையது?

ஹோல்டர் | கோப்புப்படம்

“வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நலிந்து வரும் அணிகள் அதிகம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை ஒப்பு நோக்கும்போது முப்பெரும் மூர்த்திகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள்தான் அதிகம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுகின்றன” என மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். கேரி சோபர்ஸுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டிகளில் 150 விக்கெட்டுகளையும், 2500 ரன்களையும் எடுத்த ஆல்ரவுண்டராக ஹோல்டர் அறியப்படுகிறார்.

இது தொடர்பாக ஜேசன் ஹோல்டர் கூறும்போது, “இப்போது கிரிக்கெட் உலகம் போய்க்கொண்டிருக்கும் போக்கைப் பார்க்கும் போது மூன்று பெரும் அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தவிர மற்ற அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் அரிதாகவே ஆடுகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக சராசரி 6-8 டெஸ்ட் போட்டிகளிலேயே மே.இ.தீவுகள் அணி ஆடியுள்ளது. இந்த ஆண்டு 6 போட்டிகளில் ஆடியுள்ளோம். அடுத்த ஆண்டு 6 போட்டிகள். ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் ஆடினால்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகள் என்ற மைல்கல்லை எட்ட முடியும்.

நாங்கள் கிரெக் பிராத்வெய்ட்டை பார்த்து வருகின்றோம். 2011-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். இன்னும் சதம் எடுக்கவில்லை. ஜோ ரூட் ஆடத் தொடங்கியது முதலே பிராத்வெய்ட்டும் விளையாடி வருகிறார். ஆனால் ஜோ ரூட் 130 டெஸ்ட்கள் பக்கம் ஆடிவிட்டார். இது எதைக் காட்டுகின்றது என்றால் இங்கிலாந்து எங்களை விட எத்தனை டெஸ்ட்கள் அதிகம் ஆடுகின்றன என்பதைத்தான்.

எனவே இது எங்கள் கையில் இல்லை. எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தை பேசி என்ன பயன்? எனவே கிடைக்கும் போட்டிகளில் நாம் நம் வாய்ப்பை அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

இதையேதான் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளரான ஆன்ரிச் நார்க்கியாவும் கூறுகின்றார், “ஆண்டுக்கு 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடினால் மைல்கல், சாதனைகள் பற்றி எங்கு சிந்திக்க முடியும்? நான் 50 டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியுமா என்று தெரியவில்லை. அப்படி 50 டெஸ்ட்டில் ஆட வேண்டுமெனில் எனக்கு இன்னும் 7 ஆண்டுகள் தேவை.

சில நாடுகள் அடுத்த சில மாதங்களில் 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகின்றன. எனவே கடந்த கால கிரேட்களுடன் இப்போது ஒப்பிட முடியாது, அவர்கள் அதிகம் டெஸ்ட் போட்டிகளில் ஆடினார்கள். ஆண்டுக்கு எங்களுக்கு 4 போட்டிகள் அல்லது 8 போட்டிகள்தான் கிடைக்கின்றன” என்கிறார்.

இவர்கள் கூறுவது உண்மைதான். தென் ஆப்பிரிக்கா அணிக்கு இப்போது நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை விட்டால் 2023-ல் ஒரேயொரு டெஸ்ட் போட்டிதான் இருக்கிறது.

ஐசிசியின் எதிர்கால டூர் திட்டம் என்ற ஒருதலைப் பட்சமாக, வர்த்தகமயமாக இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியாவை சுற்றியே அமைந்துள்ளது என்பதுதான் இவர்களது கருத்தின் சாராம்சமான விமர்சனம் ஆகும். இதனால் மற்ற அணிகள் நலிவடைந்து வருகின்றன அல்லது அவர்கள் ஒருநாள் மற்றும் டி20 அணிகளாக குறுகிவிட்டன. இத்தகைய போக்கு கிரிக்கெட் ஆட்டத்தை வளர்ப்பதாகாது. மாறாக தனியார் டி20 லீகுகளை நோக்கி வீரர்கள் படையெடுத்து டெஸ்ட் போட்டிகளை ஒதுக்கத் தொடங்கினால் டெஸ்ட் கிரிக்கெட்டே அழிந்துதான் போகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x