Published : 28 Feb 2023 06:32 PM
Last Updated : 28 Feb 2023 06:32 PM

இன்று ‘பாஸ்பால்’... அன்று ‘விவ்’பால்... - இந்தியாவுக்கு எதிராக 36 பந்துகளில் 61 ரன்கள் விளாசிய ரிச்சர்ட்ஸ்!

விவியன் ரிச்சர்ட்ஸ் | கோப்புப்படம்

கிரிக்கெட் உலகில் இன்றைய இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அணுகும் புதிய அணுகுமுறை ‘பாஸ்பால்’ என்று அறியப்படுகிறது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லமின் செல்லப்பெயரான ‘Baz' என்பதை வைத்து அவர்களது பயமற்ற அதிரடி ஆட்டத்தை ‘பாஸ்பால்’ என்று அழைத்து பெருமை கொள்கின்றனர். ஆனால், இது கோச்சை வைத்து நடத்தப்பட்ட பெயர்சூட்டு என்றால் அன்று பெயரில்லாமலே இத்தகைய அதிரடி ஆட்டத்தை ஆடி உலகையே கதி கலக்கியவர் விவியன் ரிச்சர்ட்ஸ். அது அவரை தவிர வேறு யாராக இருக்க முடியும்? இதற்கு உதாரணம் இதே பிப்ரவரி 28, 1983-ம் ஆண்டு நடந்த இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியாகும்.

இன்று நியூஸிலாந்து அணி இங்கிலாந்தின் ‘பாஸ்பால்’ அணுகுமுறைக்கு ஆப்பு வைத்து டெஸ்ட்டில் வென்று, தொடரையே சமன் செய்தது. தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்திலேயே முதல் டெஸ்ட்டில் பாஸ்பாலுக்கு ஆப்பு வைத்தது. ஆனால், அதே பாஸ்பால் ஆக்ரோஷத்தில் சிக்கி தொடரை 1-2 என்று இழந்தது.

அன்று ஒரே பெயர்தான் அது விவ் ரிச்சர்ட்ஸ். விவ்பால்தான் உலகம் முழுதும் ஆதிக்கம். குறிப்பாக ஒரு இன்னிங்ஸை குறிப்பிட வேண்டுமென்றால் இதே நாளில் கடந்த 1983-ல் கிங்ஸ்டன் ஜமைக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சை ‘சும்மா கிழி.. கிழி’ என்று கிழித்த விவ் ரிச்சர்ட்ஸ், 36 பந்துகளில் 61 ரன்களை விளாசி 25.2 ஓவர்களில் 172 ரன்கள் என்ற இலக்கை அபாரமாக விரட்டி 5-ம் நாள் ஆட்டம் முடியும் தருவாயில் விறுவிறுப்பாக வெற்றி கண்டது. அப்போதெல்லாம் ஒரு ஓய்வு நாள் உட்பட 6 நாட்கள் டெஸ்ட் போட்டி நடக்கும். அதுவும் இந்த டெஸ்ட் போட்டியில் 4ம் நாள் ஆட்டம் சுத்தமாக நடைபெறவில்லை.

இந்தியா, பாகிஸ்தானில் போய் 3-0 என்று உதை வாங்கி கவாஸ்கர் தலைமையில் பெரும் வெறுப்புகளைச் சம்பாதித்து கொண்டு வந்த அணியாக இருந்த வேளையில்தான் கபில் தேவ் தலைமை ஏற்றார். அவர் வந்ததும் முதல் தொடரே வெஸ்ட் இண்டீஸ் அதுவும் வலுவான அணியாக இருந்த கிளைவ் லாய்ட் தலைமை வெஸ்ட் இண்டீஸ்.

ஆனால், இந்திய அணி வீரர்கள் இந்த டெஸ்ட் போட்டியில் நன்றாக ஆடினர். முதல் இன்னிங்ஸில் யாஷ்பால் 63, பல்வீந்தர் சிங் சாந்து 68 ரன்கள் விளாச இந்திய அணி 251 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து ஆடிய வலுவான மேற்கிந்திய பேட்டிங் கபில்தேவ் மற்றும் ரவி சாஸ்திரியின் அபார பவுலிங்கினால் 254 ரன்களையே எடுத்தது. கபில் 4 விக்கெட், சாஸ்திரி 4 விக்கெட். வெங்கட் ராகவன், 3 கேட்ச்களை பிடித்தார். வெங்கட், கல்லியில் மிகச்சிறந்த பீல்டராக அவரது காலத்தில் திகழ்ந்தவர். முதல் இன்னிங்ஸில் ரிச்சர்ட்ஸ் 29 ரன்களில் வெங்கட் கேட்ச் எடுக்க ரவி சாஸ்திரியிடம் வீழ்ந்தார். கிளைவ் லாய்ட் கிளீன் பவுல்டு ஆனார். 2வது இன்னிங்ஸில் இந்தியாவின் அமர்நாத் மட்டுமே வெஸ்ட் இண்டீஸின் அதி ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சுக்கு ஈடு கொடுத்து 40 ரன்களை அதிகபட்சமாக எடுக்க இந்தியா 174 ரன்களுக்குச் சுருண்டது. ஆண்டி ராபர்ட்ஸ் 5 விக்கெட்டுகள், மால்கம் மார்ஷல் 3 விக்கெட், ஹோல்டிங் 2 விக்கெட்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டார்கெட் 172 ரன்கள். குறைந்த ஓவர்களே கைவசம் இருந்தன. அப்போது கிரீனிட்ஜ், ஹைன்ஸ் ஓப்பனிங்கில் இறங்கி வெளுத்து வாங்கினர். 21 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸ் என்று டெஸ்மண்ட் ஹைன்ஸ் 34 ரன்கள் எடுத்து முதலில் ஆட்டமிழந்தார். கிளைவ் லாய்ட், கபில் தேவ் பந்தில் 3 ரன்களுக்கு வீழ்ந்தார். 2 விக்கெட்டுகள் இழப்பில் 65 ரன்கள் என்ற நிலையிலிருந்து கார்டன் கிரீனிட்ஜ், மாஸ்டர் பிளாஸ்டர் விவ் ரிச்சர்ட்ஸ் சேர்ந்து ஸ்கோரை சடுதியில் 131 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

கிரீனிட்ஜ், கபில் பந்தில் பவுல்டு ஆக, விவ் ரிச்சர்ட்ஸ் இந்திய பவுலிங்கை நாலாப்பக்கமும் சிதறவிட அவர் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 36 பந்துகளில் 61 ரன்கள் விளாசி இலக்குக்கு அருகே வந்து அமர்நாத் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியில் ஜெஃப் டியூஜான் 17 ரன்கள் எடுத்து வெற்றிக்கு இட்டுச் சென்றார். வெஸ்ட் இண்டீஸ் 25.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து வென்றது. ஆனால், ரிச்சர்ட்ஸ் இறங்கிய பிறகு இந்தியப் பந்து வீச்சு சிதறடிக்கப்பட்டது. கபில்தேவ், 13 ஓவர்கள் 74 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாந்து, 3 ஓவர் 22 ரன்கள், மொஹீந்தர் அமர்நாத் 2.2 ஓவர் 34 ரன்கள் 2 விக்கெட்.

இந்தத் தொடரில் அடுத்த போட்டியான போர்ட் ஆஃப் ஸ்பெயின் டெஸ்ட் போட்டியில் இதே போன்ற ஒரு தோல்விச்சூழலை கபில் தேவ் தனது 95 பந்துகள் சதத்தின் மூலம் எதிரணிக்கு அதிர்ச்சியளித்து முறியடித்தார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு சதம் கண்ட மாவீரன் கபில் தேவ். எனவே பாஸ்பால் என்பது இங்கிலாந்துக்குதான் புதிது. கிரிக்கெட்டுக்கு ஒன்றும் புதிதல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x