Published : 22 Feb 2023 08:25 PM
Last Updated : 22 Feb 2023 08:25 PM

கே.எல்.ராகுல் மீது நம்பிக்கை வைக்க இன்னும் இருக்கிறதா கிரிக்கெட் காரணங்கள்? - ஒரு பார்வை

கே.எல்.ராகுல் | கோப்புப்படம்

இந்திய அணி தொடர் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்தாலும் ஒரு கேள்வி அனைத்து கிரிகெட் ரசிகர்களையும் குழப்புவது என்னவெனில் இந்திய அணியில் கே.எல்.ராகுலின் இடமே. இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துள்ளது. அணி வெற்றி பெறும் போது ‘செமயாக சொதப்பி’ வரும் ராகுல் அணியில் இருந்தால் என்ன கெட்டு விடப்போகிறது? என்று பலரும் நினைக்கலாம். ஆனால், அவர் அணியில் நீடிப்பதற்கு கிரிக்கெட் காரணங்கள் அல்லாத பிற காரணங்கள்தான் பிரதானமாக உள்ளது என்ற ஐயம் சிலருக்கு ஏற்படுவதும் நியாயமே.

அன்று நாக்பூரில் வெறும் 115 ரன்கள்தான் இந்திய அணியின் வெற்றிக்குத் தேவை. அந்த ஸ்கோரை எதிர்த்து ஆடும்போது கூட சுதந்திரமாக ஆட முடியாமல் எதிர் அணியில் ஏதோ, ராபர்ட்ஸ், ஆலன் டோனால்டு, மால்கம் மார்ஷல், ஷோயப் அக்தர், ஆம்புரோஸ், வால்ஷ் இருப்பது போல் அவர் முகத்தில் பீதியும், அவர் உடம்பில் நடுக்கமும் தோன்றக் காரணம் என்ன? அவர் இறங்கும் போதே, ‘எல்லாம் அவன் செயல்’ என நடிகர் வடிவேலு சொல்வது போல கூறிவிட்டு வந்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது. வடிவேலு புதிதாகக் கட்சியில் சேர வந்திருப்பவர்களைப் பார்த்துக் கூறுவார், “உங்க கிட்ட இருக்கிற அதே பீதி எங்கிட்டயும் ஹெவியாவே இருக்கு. அதுக்காக அத்து விட்டுட்டு ஓடிரக்கூடாது’ என்பார். அதையே ராகுல் சொல்வது போல் ஒரு மீம் கற்பனை செய்து பார்த்தால், ராகுலை அத்து விடாமல் அணியில் வைத்திருப்பது போல்தான் தோன்றுகிறது.

கடைசி 9 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ராகுலின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் வெறும் 23 ரன்களே. கடைசி 10 இன்னிங்ஸ்களில் கே.எல்.ராகுலின் ஸ்கோர் இதோ: 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17, 1. ஆக மொத்தம் 125 ரன்கள்தான். இவரிடம் அசாத்திய திறமை இருப்பதாகவும். இவரது பேட்டிங் உத்தியை சச்சின் டெண்டுல்கருடனும், இன்னும் ஒரு படிமேலே போய் தமாஷாக கூட இல்லாமல் சீரியஸாக ரிச்சர்ட்ஸ் உடனும் ஒப்பிடுவதை என்னவென்று சொல்வது?

கபில் தேவை ஒரு போட்டியில் கவாஸ்கர் கேப்டானக இருக்கும்போது உட்கார வைத்த போது கூட இத்தனை விவாதங்கள் நடைபெற்றதில்லை. ஆனால், இன்று கே.எல்.ராகுலை அணியை விட்டு தூக்குங்கள், அவர் ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்நாட்டு சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் நன்கு பயிற்சி பெறட்டும் என்று யாராவது கிரிக்கெட் தெரிந்தவர்கள் கூறினால் உடனே அவர் மீது பாய்ந்து வந்து கே.எல்.ராகுல் எப்படிப்பட்ட பிளேயர் தெரியுமா? ‘அவரை அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக, ஜப்பானில் ஜாக்கிசான்’ கூப்பிட்டாக என்று கரகாட்டக்காரன் கவுண்டமணி கிண்டல் செய்வாரே அந்த ரேஞ்சுக்கு ரோகித் சர்மா உட்பட சிலர் ராகுலுக்கு முட்டுக் கொடுப்பதுதான் விசித்திரமாக இருக்கின்றது.

மாற்று வீரர்களா இல்லை? ஷுப்மன் கில் இருக்கிறார், சர்பராஸ் கான் காத்துக் கொண்டிருக்கிறார், பிரித்வி ஷா இருக்கிறார். ஏன் இவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கக் கூடாது? என்ற காமன் சென்ஸ் கேள்விக்குப் பதில் கிடையாமல் போவதன் பின்னணி என்னவெனில் அவர் ஐபிஎல் அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற புதிதாகப் பிறந்த ஐபிஎல் கிரிக்கெட் அணியின் கேப்டன். ஐபிஎல் கிரிக்கெட் என்பது வர்த்தக உலகில், விளம்பர உலகில் வீரர்களின் ரேட்டிங் உட்பட பலவிதமான உள்ளார்ந்த வணிக விஷயங்கள் அடங்கி இருப்பதாகும். இது ஐபிஎல் ஆடும் எல்லோருக்கும் பொருந்தாது. உடனே ஏன் இஷான் கிஷனுக்கும்தான் உள்ளது என்று கேட்கக் கூடாது. சூப்பர் ஸ்டார் பிளேயர்களுக்கு இருக்கும் ரேட்டிங் மற்ற வீரர்களுக்கு இருக்காது. இந்த படிமுறை அடுக்கில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, தோனி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட டாப் வீரர்கள் இருப்பார்கள். இவர்களுக்கென்று கமர்ஷியல் ரேட்டிங் இருக்கும்.

சர்வதேச போட்டிகளில் ஆடும் வீரர்கள் அந்தந்த நாட்டு அணியிலிருந்து நீக்கப்படும்போது நிச்சயம் ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவர்களது கமர்ஷியல் ரேட்டிங் அடிவாங்கவே செய்யும். 10 இன்னிங்ஸ்களாக ஒன்றுமே ஆடவில்லை ராகுல். 47 டெஸ்ட்கள் கொண்ட ராகுலின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது சராசரி 33.44. கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து அவரது சராசரி 25.82 மட்டுமே என்கின்றன புள்ளிவிவரங்கள். 48 இன்னிங்ஸ்களில் 6 முறைதான் 50+ ஸ்கோரை அவர் எடுத்துள்ளார்.

பிரச்சனை என்னவெனில் ஐபிஎல் சூப்பர் ஸ்டார் பிளேயராக உயர் வணிக ரேட்டிங் இல்லாத வீரருக்கு இதே போல் வக்காலத்து வாங்கி 10 இன்னிங்ஸ் சொதப்பினாலும் 47 டெஸ்ட்களில் வெறும் 33 சராசரி வைத்திருக்கும் வீரராக இருந்தாலும் தொடர் வாய்ப்புகள் அளிக்கப்படுமா என்பதே கேள்வி. கருண் நாயருக்கு என்ன நடந்தது? மணீஷ் பாண்டேவுக்கு என்ன நடந்தது? முரளி விஜய் எப்படி நீக்கப்பட்டார்? ரகானே எப்படி நீக்கப்பட்டார்? சமீப உதாரணம் மயங்க் அக்ரவால் ஏன் நீக்கப்பட்டார்? ஏன் ரோகித் சர்மா 2007-ல் அணிக்கு வந்தவர் எத்தனை குறைந்த ஸ்கோர்களை அவர் எடுத்திருப்பார்.

ஆனால், தொடர் வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்பட்டதன் காரணம் ஐபிஎல் தான். கமர்ஷியல் ரேக்கிங்தான். ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகவும் ஆகிவிட்ட பிறகு ரேட்டிங் அதிகம். அவரை அணியில் இருந்து நீக்க முடியாது என்ற நிலையை எட்டியது. கிரிக்கெட் காரணங்களால் அல்ல. விராட் கோலி 3 ஆண்டுகளாக சொதப்பி வந்தார். அவரை அணியில் தக்கவைத்தது மட்டும்தான் இரண்டு காரணங்களினாலும் என்று கூறலாம். ஒன்று அவர் பங்களிப்பு அசாதாரணமானது என்பதோடு வணிக ரேட்டிங்கும், அவர் கிரிக்கெட் ஆட்டம் மேம்படும் என்ற நம்பிக்கையும் ஒன்றிணைந்தது எனலாம். ஆனால், ராகுல் விஷயத்தில் அவரைத் தக்கவைப்பது அவரது கிரிக்கெட் திறன் காரணங்களுக்காக அல்ல என்பதே நம்முடைய ஐயமாக இருக்கின்றது.

இத்தனை போட்டிகள் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து அவர் கடைசியில் ஒரு சதம் எடுத்தவுடன் பார்த்தீர்களா? அவசரப்பட்டு எல்லோரும் விமர்சித்தீர்களே. இப்ப என்ன ஆயிற்று என்று எக்காளமிடுவார்கள். ஆனால், தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருந்தால் இதே கருண் நாயரும், மணீஷ் பாண்டேவும் கூட நல்ல டெஸ்ட் வீரர்களாக இன்றும் அணியில் முக்கியமான வீரர்களாகி இருப்பார்களே. அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாத காரணம் அவர்களுக்கான கமர்ஷியல் ரேட்டிங் இல்லை. ஐபிஎல் ஸ்பான்சர்கள் பின்னணி கொண்ட உயர் கமர்ஷியல் ரேட்டிங் இவர்களுக்குக் கிடையாது என்பதுதான் ராகுலை அணியில் தக்கவைக்கிறதோ என்ற ஐயம் எழுவது நியாயமே. இதைப்பற்றி பிசிசிஐ, ஐபிஎல், வர்த்தக நெட்வொர்க்குகள் பற்றி ஆழமான விவரம் அறிந்தவர்கள் இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் பேச முடியும். நம்மைப் பொறுத்தவரை இந்த விஷயங்கள் இப்போதைக்கு பூர்வாங்க ஐயமாகவே முன் வைக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x