Published : 02 Jul 2014 05:45 PM
Last Updated : 02 Jul 2014 05:45 PM

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது ஷோயப் மாலிக் காட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மீது கடும் விமர்சனங்களை வைத்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பாக்.பாஷன் என்ற இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கேப்டன் மிஸ்பா உல் ஹக், சக வீரர் ஹபீஸ் ஆகியோர் மீது விமர்சனங்களைத் தொடுத்துள்ளார்.

"கேப்டன் மிஸ்பா உல் ஹக் இன்னும் எத்தனை நாட்களுக்கு விளையாடப் போகிறார் அவரது எதிர்காலத்திட்டம் என்னவென்பதை பாகிஸ்தான் வாரியம் அவருடன் ஆலோசிக்க வேண்டும். அவ்வாறு பேசி முடிவெடுத்தால்தான் அடுத்த கேப்டனை உருவாக்க முடியும்” என்று கூறினார் ஷோயப் மாலிக்.

மேலும் பாகிஸ்தான் அணியில் தனது இடம் புரியாத ஒன்றாகவே இருக்கிறது என்று அவர் கூறுகையில், “அடுத்த முறை பாகிஸ்தான் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் நான் கேட்பேன் எனது இடம் என்ன? எனது பணி என்ன? ஏன் எனக்கு பவுலிங் தருவதில்லை. இங்கிலாந்து கவுண்டி உள்ளிட்ட போட்டிகளில் என்னை பவுலராக பயன்படுத்தும் போது ஏன் இவர்கள் எனக்கு பந்து வீச வாய்ப்புத் தருவதில்லை என்று கேட்பேன், மேலும் பேட்டிங்கில் அவர்கள் இஷ்டத்திற்கு 6 ஆம் நிலை முதல் 8ஆம் நிலை வரை எங்கு வேண்டுமானாலும் என்னை களமிறக்குகிறார்கள். ஏன் எனக்கு நிலையான ஒரு இடம் தருவதில்லை என்றும் நான் தெளிவுபடுத்திக் கொள்வேன்” என்றார் மாலிக்.

பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் மொகமட் ஹபீஸ் உடனான அவரது கருத்து வேறுபாடு பற்றி மாலிக் கூறும்போது, “உலகக் கோப்பை டி20 அணியில் எனது தேர்வு குறித்து அவர் கூறிய கருத்து என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அவரது கூற்றுக்கு நான் பதிலளித்திருக்க முடியும், ஆனால் அதனால் எந்த வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

நான் அவருக்குச் சரியாகப் பதில் கூறிக்கொண்டிருந்தால் எனக்கும் அவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போய் விடும். ஆனால் உண்மை என்னவென்பதை நாங்கள் இருவருமே அறிவோம்” என்றார். ஆனால் அந்த உண்மை என்னவென்பதைத் தெளிவுபடுத்தவில்லை.

தான் பாகிஸ்தான் கேப்டனாக இருந்த போது, எனக்கும் பிறருக்கும் ஈகோ பிரச்சனைகள் இருந்தது, நான் வெற்றிகரமான கேப்டனாகி விடக்கூடாது என்று சக வீரர்களில் சிலர் நினைத்தனர். அணியின் சக வீரர்கள் மட்டுமல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட்டைச் சேர்ந்த வேறு சிலரும் நான் கேப்டனாகத் தொடரக்கூடாது என்று நினைத்தனர். என்று மாலிக் விமர்சனம் வைத்தார்.

இவரது இந்த விமர்சனங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்திக்கு கோபத்தைக் கிளப்பியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x