Published : 20 Jul 2014 01:32 PM
Last Updated : 20 Jul 2014 01:32 PM

என்னுடைய பேட்டிங் ஃபார்ம் என் பந்து வீச்சிற்கு உதவுகிறது: புவனேஷ் குமார்

தனது பந்துவீச்சு சிறப்பாக அமைய பேட்டிங்கில் தான் ரன்களை எடுப்பதால் விளைந்த தன்னம்பிக்கையே காரணம் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் 2 டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ் குமார் இருமுறையும் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லைத் தொட்டார்.

மேலும் பேட்டிங்கில், டிரா ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு அரைசதங்களை எடுத்த புவனேஷ் குமார் லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்ஸிலும் அபாரமாக பேட்டிங் செய்தார்.

இந்த நிலையில் அவர் பிசிசிஐ.டிவி.யில் கூறியிருப்பதாவது:

ஒரு பேட்ஸ்மெனாக யோசித்துப் பார்தால் பவுலர்களை நாம் ஆதிக்கம் செலுத்துகிறோம், இந்த டெஸ்ட் தொடரில் நான் எடுத்த ரன்கள்தான் எனது பந்துவீச்சு வெற்றிகரமாக அமைய உதவியுள்ளது. நீண்ட நேரம் பேட் செய்யும்போது ஒரு பேட்ஸ்மெனுக்கு எந்தந்த இடத்தில் பிட்ச் செய்தால் பிரச்சனைகள் வரும் என்பது புரிந்தது.

இதனால் பேட்ஸ்மென் என்ன எண்ணுகிறார் என்பதை என்னால் கணிக்க முடிகிறது, அதற்கேற்ப நான் அடுத்த பந்தைத் திட்டமிடுகிறேன். பேட்டிங்கில் ரன்கள் எடுப்பது பந்து வீசும்போது அபரிமிதமான தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது.

லார்ட்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய எனது மாநில அணித் தோழர்கள் ஆர்.பி.சிங் மற்றும் பிரவீண் குமார் பெயருடன் என் பெயரும் இணைத்துப் பேசப்படுவதில் எனக்கு பெருமை கூடுகிறது.

இந்தத் தொடருக்கு முன் பிரவீண் குமார் தனக்கு இங்கிலாந்து பிட்ச்கள் பற்றி நிறைய ஆலோசனைகள் வழங்கினார்.

தோனிக்குப் புகழாரம்:

தோனி எப்போதுமே பவுலர்களின் கேப்டன். எனது முதல் போட்டியிலேயே அவர் என்னிடம், எனக்கு வேண்டிய ஃபீல்டிங்கை என்னையே தேர்வு செய்யச் சொன்னார். ஏதாவது மாற்ற வேண்டுமெனில் நான் கூறுகிறேன் என்பார் தோனி. இதுவரை அந்தத் திட்டம் நல்லபடியாகவே இருந்து வருகிறது.

பேட்ஸ்மென்கள் என் பந்தின் ஸ்விங்கை கட்டுப்படுத்த மேலேறி வந்து ஆடிவிடக்கூடாது என்பதற்காக தோனி ஸ்டம்ப் அருகே வந்து கீப் செய்கிறார். இது ஒரு முக்கியமான விஷயமாகும், கடினமானதும் கூட. ஒரே ஓவரில் கூட அவர் முன்னே வந்து நிற்பார் பிறகு சற்று பின்னால் சென்று நிற்பார். இப்படித்தான் அவருடன் சேர்ந்து பணியாற்றி வருகிறேன்.

இவ்வாறு கூறினார் புவனேஷ் குமார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x