Published : 06 Feb 2023 04:33 PM
Last Updated : 06 Feb 2023 04:33 PM

டெஸ்ட் கேப்டன்சி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கும் பெரிய சவால்!

ரோகித் சர்மா | கோப்புப்படம்

இங்கிலாந்தில் மீதமிருந்த 5-வது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலகினார். அதன்பிறகு இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெரிய சவால் அவரது கேப்டன்சிக்கு காத்திருக்கிறது. வரும் 9-ம் தேதி நாக்பூரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய ஆக்ரோஷத்திற்கு சரிசமமாக நிற்க இங்கு ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இல்லை. விராட் கோலியும் கேப்டனாக இல்லை. இந்த ஆஸ்திரேலிய அணி வித்தியாசமானது. பழைய ஆஸ்திரேலியா போல் வெறிநாய் தனமாக எதிரணியினர் மீது வார்த்தை வசைகளால் தாக்கி மன ஓர்மையைக் குலைக்கும் (Mental Disintegration) ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸ்திரேலியா அணி அல்ல. பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் வார்னர், ஸ்மித் தடை செய்யப்பட்ட பிறகே அந்த அணியின் நடத்தை பெரிய அளவில் மாறியுள்ளது.

புறவயமாக வெளியே தெரிந்த ஆக்ரோஷம், இப்போது உள்வயமாகத் திரும்பியுள்ளது. இதுதான் அபாயகரமானது. இந்த ஆஸ்திரேலிய அணியின் உள்முக ஆக்ரோஷத்தை நாம் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பார்த்தோம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகப் பார்த்தோம். இந்தியா விஷயம் வேறு. ஏனெனில் ஆஸ்திரேலிய மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்குப் பிறகு இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்ற அணி இந்திய அணி மட்டுமே. இந்த தோல்விகளின் ஆறாத வடுவுடன் பழிவாங்கும் உள்முக புலியாக ஆஸ்திரேலியா இங்கு வந்துள்ளது.

ரோகித் சர்மாவுக்கு இங்குதான் சவால் காத்திருக்கிறது. மேலும் காயமோ அல்லது வேறு என்னவோ ரோகித் சர்மா இந்தியா ஆடிய கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் 8-ல் ஆட முடியாமல் போனது, ஆகவே டெஸ்ட் கேப்டன்சியைப் பொறுத்தவரை அவர் இன்னும் முதிராத ஒரு ‘பச்சா’தான். கோலி - ரவி சாஸ்திரி காலத்திற்குப் பிறகே தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் உதை. இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்ஹாமில் மிகப்பெரிய உதை வாங்கியுள்ளது இந்திய அணி.

அஸ்வினை விளையாட அவர்கள் அவரைப்போலவே ஒருவரை பிடித்து பயிற்சி செய்து வருவதாக எழும் செய்திகளில் ஏதோ ஆஸ்திரேலியா அணி அஸ்வினைக் கண்டு பயந்து விட்டது போல் நம் ஊடகங்கள் பெருமை கொண்டு மெய்சிலிர்க்க எழுதி வருகின்றனர். ஆனால், நேதன் லயன் என்ற முரளிதரன், ஷேன் வார்னுக்குப் பிறகு ஆடிவரும் உலகமகா ஸ்பின்னர் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை. நேதன் லயன் பந்து வீச்சை இந்த இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பேட்டரைக் காட்டுமாறு இதே ஊடகங்கள் ஏன் எழுதுவதில்லை. ரிஷப் பந்த் மட்டும்தான், அவரும் இல்லை. அடுத்ததாக ஸ்பின்னை நன்றாக ஆடும் ஸ்ரேயஸ் அய்யர். முதல் டெஸ்ட் போட்டிக்கு சந்தேகம் என்று கூறப்படுகிறது.

விராட் கோலி சமீப காலங்களில் ஸ்பின் பந்து வீச்சை சரியாகக் கணிக்க முடியாமல் திணறி வருகிறார். வங்கதேசத்திற்கு எதிராக முன் சென்று ஆட வேண்டிய பந்தை பின்னால் சென்று ஆடி ஆட்டமிழந்தார். அவரது கணிப்புகளில் பெரிய சிக்கல்கள் உள்ளன. ஒருநாள் போட்டிகளில் கத்துக்குட்டி அணிகளுடன் எடுத்த சதங்களை வைத்து அவரை உயர்த்திப் பிடிப்பது ஊடகங்கள் செய்யும் வேலை. ஆனால், உண்மையில் டெஸ்ட் போட்டிகளில் அதுவும் இப்போது வந்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது பேட்டிங் கிளிக் ஆனால்தான் இந்திய அணியின் பக்கம் வெற்றி தேவதை திரும்புவாள். அவரை தட்டிப் போட்டு தூக்கி விட்டனர் என்றால் காப்பாற்றுவதற்கு ரிஷப் பந்த் கூட இப்போது இல்லை. அதே போல் பவுலிங்கில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு.

ஒவ்வொரு முறையும் அணி வெல்லும் போது அணி வீரர்கள், கேப்டனின் திறமை எப்படி என்று பேட்டி கொடுப்பார்கள். ஆனால், எப்படி வித்தியாசமாகச் செய்தார் என்பது பற்றிய எந்த ஒரு ஆய்வு முடிவும் இவர்களது கருத்தில் இருக்காது என்பதையே பார்த்து வருகிறோம். ரோகித் சர்மா, டெஸ்ட் கேப்டன்சி இன்னும் தொடங்கவே இல்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது.

2016-17 தொடரில் வந்த ஆஸ்திரேலிய அணியை விட இப்போது வந்துள்ள அணி புதிய திறமைகளின் சேர்க்கையாக உள்ளது. 2021-க்குப் பிறகு ஆசியாவில் புஜாராவின் சராசரி 34, விராட் கோலியின் டெஸ்ட் சராசரி 24. ரோகித் சர்மா மார்ச் 2022க்குப் பிறகு டெஸ்ட் போட்டி பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை எனவே அவரது ஆட்டம் பற்றி இருண்டதாகவே உள்ளது.

அனைத்திற்கும் மேலாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதை உறுதி செய்யும் தொடராக இது உள்ளதால் ரோகித் சர்மாவுக்கு தன் சொந்த பேட்டிங் நெருக்கடியுடன் அணியின் வெற்றி நெருக்கடியும் கூடுதலாகச் சேர்ந்துள்ளது. பொதுவாக பூஞ்சையான அவரால் நெருக்கடிகளை சமாளிக்க முடியுமா என்பது தெரியவில்லை.

மாறாக ஆஸ்திரேலியா நிச்சயம் ஒரு பழிவாங்கும் வெறியுடன் வந்துள்ளது. ஆனால் அது அவர்களின் பேச்சில் எப்போதும் போல் வெளிப்படுவதில்லை. இது உள்முக ஆக்ரோஷம், எனவே வெளியே தெரியாது. பாகிஸ்தானில் மட்டைப் பிட்சில் நேதன் லயனும், கமின்ஸும் டெஸ்ட் தொடரை வென்றனர். மாறாக வங்கதேசத்தில் ஸ்பின் பிட்சில் இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் சிறிய வெற்றி இலக்கையும் போராடியே வென்றது நினைவிருக்கலாம். ஆகவே ரோகித் சர்மா டெஸ்ட் கேப்டன்சி நீட்டிப்பா அல்லது கல்தாவா என்பதை தீர்மானிக்கும் டெஸ்ட் தொடராகும் இது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x