Published : 04 Feb 2023 05:28 AM
Last Updated : 04 Feb 2023 05:28 AM

‘‘கிரிக்கெட் சார்ந்த மற்றொரு பக்கத்தில் எனது அடுத்த பயணம்’’ - ‘கடைசி ஓவர் நாயகன்’ ஜோகிந்தர் சர்மா

ஜோகிந்தர் சர்மா

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் மிதவேகப் பந்து வீச்சாளரும் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரை வெற்றிகரமாக வீசியவருமான ஜோகிந்தர் சர்மா, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

39 வயதான ஜோகிந்தர் சர்மா இந்திய அணிக்காக 2004 முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 4 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 4 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ஹரியாணாவுக்காக உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரை வீச கேப்டன் தோனி, அனுபவம் இல்லாத ஜோகிந்தர் சர்மாவை அழைத்து பந்தை கையில் கொடுத்தார். அவர், அற்புதமாக வீசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த தருணங்களை பதிவு செய்தார்.

கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தபோதிலும் அந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் வெற்றிப்பாதையிலேயே இருந்தது. 4 பந்துகளில் 6 ரன்களே தேவை என்ற அளவுக்கு ஆட்டத்தை நெருக்கமாக கொண்டு வந்திருந்தார் மிஸ்பா உல் ஹக். அப்போது ஜோகிந்தர் சர்மா வீசிய பந்தை தவறான முறையில் ஸ்கூப் ஷாட் அடித்து ஃபைன் லெக் திசையில் நின்ற ஸ்ரீசாந்த்திடம் பிடிகொடுத்தார். இதனால் இந்திய அணி டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது. அதுவே ஜோகிந்தர் சர்மா விளையாடிய கடைசி சர்வதேச ஆட்டமாகும்.

எனினும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 ஆண்டுகள் விளையாடினார். இதன் பின்னர் ஹரியாணா காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தார். கடைசியாக ஹரியாணா அணிக்காக லிஸ்ட் ஏ போட்டிகளில் கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் விளையாடினார். இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்றார்.

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜோகிந்தர் சர்மா அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஓய்வு குறித்த தனது அறிவிப்பில், “உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். 2002 முதல் 2017 வரையிலான காலம் என் வாழ்நாளின் பொற்காலம். இந்திய அணிக்காக விளையாடியதில் பெருமை கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த பிசிசிஐ, ஹரியாணா கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹரியாணா அரசுக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் சார்ந்த மற்றொரு பக்கத்தில் எனது பயணத்தை தொடங்க உள்ளேன். அதை அறிவிப்பதில் மகிழ்ச்சி” என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x