Published : 27 Jan 2023 03:03 PM
Last Updated : 27 Jan 2023 03:03 PM

விராட் கோலிக்கு ‘ஆண்டின் சிறந்த நடுவர் விருது’ - பாபர் அசாம் ரசிகர்கள் கடும் கேலி!

விராட் கோலி மற்றும் பாபர் அசாம் | கோப்புப்படம்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து 2-வது முறையாக ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றதையடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டனர். ஆனால், அதற்காக இந்திய லெஜண்ட் விராட் கோலியை கேலி செய்யலாமா? ஆனால், அப்படிச் செய்வதில்தான் அவர்களின் கொடூர மகிழ்ச்சி இருக்கிறது என்பதை இந்தச் செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

பாபர் அசாம், 2022-ம் ஆண்டில் 9 ஒருநாள் போட்டிகளில் 679 ரன்களை 84.87 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். தனிப்பட்ட சாதனையுடன் கேப்டனாகவும் அவர் கடந்த ஆண்டில் பிரமாதமாகச் செயல்பட்டிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உதை மேல் உதை வாங்கினாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் மட்டுமே தோற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பாபர் அசாமை பாகிஸ்தான் நலம் விரும்பிகள் விராட் கோலியுடன் ஒப்பிட்டு புகழ் பாடுவது அரிதானதல்ல. பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் எந்தக் காலத்திலும் இந்திய வீரருடன் ஒப்பிடுவது வழக்கமே. இதற்கு சில உதாரணங்களைச் குறிப்பிட்டு சொல்ல முடியும்..

  • கவாஸ்கர் - மஜீத் கான்
  • அசாருதீன் - ஜாகிர் அப்பாஸ்
  • வெங்சர்க்கார்- ஜாவேத் மியாண்டட்
  • கபில் தேவ் - இம்ரான் கான்
  • சச்சின் டெண்டுல்கர்-இன்சமாம் உல் ஹக்
  • தோனி - மிஸ்பா உல் ஹக்
  • விராட் கோலி - பாபர் அசாம்

ஆனால், பாவம் வீரேந்திர சேவாக் 302 ரன்களை விளாசி ‘சுல்தான் ஆஃப் முல்டான்’ என்று பெயர் எடுத்த போது கம்பேர் செய்ய பாகிஸ்தானில் ஒரு வீரர் கூட இல்லை என்பதே நிதர்சனம். இதோடு முடியவில்லை இது. ஒருமுறை இர்பான் பதான் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஹாட்ரிக் சாதனை புரிந்த போது வயிறு எரிந்த ஜாவேத் மியாண்டட், ‘பாகிஸ்தானில் தெருவுக்கு தெரு இர்பான் பதான்கள் உள்ளனர்’ என்று சுய சமாதானம் செய்து கொண்டிருந்தார். ஆனால், இம்ரான் கான் போன்ற பெருந்தன்மையாளர் ஒருபோதும் கவாஸ்கரை யாருடனும் ஒப்பிட்டது இல்லை. கவாஸ்கர் தனிச்சிறப்பான வீரர் என்பதே இம்ரான் கானின் துணிபு.

ஆனால், இந்திய வீரர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் என யாராக இருந்தாலும் பாகிஸ்தான் வீரருடன் இந்திய வீரரை ஒப்பிடுவது இல்லை. என்ன வாசிம் அக்ரம் போன்ற மேதை ஸ்விங் பவுலருக்கு நிகராக எப்போதாவது ஜாகிர் கான், இர்பான் பதானை ஒப்பிட்டு பார்த்துள்ளனர், ஆனால், பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை. இந்த ஒப்பீடு கூட வாசிம் அக்ரம் மீதான பிரமிப்பினால் ஏற்பட்ட ஒன்றுதானே தவிர பாகிஸ்தான் ஒப்பீடு போல் இல்லாமையினால் உண்டானதல்ல.

இந்நிலையில்தான் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தன் ட்வீட்டில் “விராட் கோலி ஆண்டின் சிறந்த ஐசிசி அம்பயர் விருதை வென்றார்” என்று கேலி பேசியுள்ளார். காரணம் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் போது அந்த இந்தியா-பாகிஸ்தான் த்ரில் போட்டியின் போது நடுவர் மீது செல்வாக்கு செலுத்தினார் கோலி. அதைக் குறிப்பிட்டு சிறந்த நடுவர் கோலி என்று கேலி செய்துள்ளனர்.

இன்னும் சில ட்விட்டர் பயனர்கள் இதற்கு லைக் போட்டுள்ளனர். இன்னொரு ட்விட்டர் பயனர், ’பாபர் அசாம் கடினமான பேட்டிங் சூழ்நிலைகளிலும் பிட்ச்களிலும் ஆடி நிரூபித்தவர். ஆனால், கோலி பேட்டிங் பிட்ச்களில், பேட்டிங் சாதகப் பிட்ச்களிலும் கோலிக்கும் இந்திய அணிக்கும் என்றே தயாரிக்கப்பட்ட மட்டைப் பிட்ச்களில் ஆடி சதங்களைக் குவித்தவர்’ என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் இப்படிப்பட்ட சண்டைகள் தான் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக வைத்திருக்கிறது என்று புரிந்து கொண்டால் அது தவறு. மாறாக விராட் கோலி, பாபர் அசாமையும். பாபர் அசாம் விராட் கோலியையும் பரஸ்பரம் மதித்தும் ஒருவர் விளையாட்டை ஒருவர் ரசித்தும் பேசுவதுதான் கிரிக்கெட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x