Last Updated : 09 Dec, 2016 05:54 PM

 

Published : 09 Dec 2016 05:54 PM
Last Updated : 09 Dec 2016 05:54 PM

இங்கிலாந்தின் 400 ரன்களுக்கு எதிராக விஜய், புஜாரா சிறப்பான ஆட்டம்

மும்பையில் நடைபெறும் 4-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுக்க இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.

169 பந்துகளைச் சந்தித்து முரளி விஜய் 6 பவுண்டரிக்ள் 2 சிக்சர்களுடன் 70 ரன்களையும் புஜாரா 6 பவுண்டரிகளுடன் 47 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர்.

மும்பையில் முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்த அணி தோற்றதில்லை என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து ஸ்பின்னர்கள் பிட்சின் ஆதரவை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒருவிதத்தில் விஜய், புஜாரா சரியாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவில்லை என்று கூறலாம். விஜய்யின் டிரைவ்கள் அருமையானது, அவர் ரஷித் மற்றும் அலியை அடித்த சிக்சர்களும் எதிரணியின் களவியூகத்தை கேள்விக்குட்படுத்தியதாகும். விஜய்யும் புஜாராவும் இணைந்து 107 ரன்களை இதுவரை சேர்த்துள்ளனர்.

புஜாரா இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களை ஆஃப் திசையில் அருமையாக ஆடினார். ஸ்பின்னர்களை மேலேறி வந்து எதிர்கொண்டார். ராகுல் 41 பந்துகளில் 4பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் குக் வைத்த பொறியில் சிக்கினார். மொயீன் அலியை 14-வது ஓவரை வீச அழைத்த குக் கவர் திசையிலிருந்த பீல்டரை அகற்றி அந்த இடத்தில் பீல்டர் இல்லாத வெற்றிடமாக மாற்றினார், இந்த அருமையான செஸ் காய் நகர்த்தல் பொறியை ராகுல் புரிந்து கொள்ளவில்லையா அல்லது பொறியை முறியடிக்கிறேன் பார் என்ற திண்ணமா என்று தெரியவில்லை. அலி ஒரு பந்தை நன்றாக அருமையாக தூக்கி ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வீசி ஸ்பின் செய்ய, காலியான கவர் திசையில் டிரைவ் ஆடும் சபலத்தைக் கட்டுப்படுத்த முடியாத ராகுல் ஆடப்போக பந்து திரும்பி கால்காப்புக்கும் மட்டைக்கும் இடையே புகுந்து பவுல்டு ஆனது. இது ஒரு கிளாசிக் ஆஃப் ஸ்பின் ஆட்டமிழப்பாகும்.

அதன் பிறகு இங்கிலாந்தின் முயற்சிகளை முறியடித்தனர் விஜய்யும் புஜாராவும் இந்தியா சற்றே வலுவாக 146/1 என்று உள்ளது.

முன்னதாக ஜோஸ் பட்லர் 76 ரன்களை எடுக்க இங்கிலாந்து 400 ரன்களை எட்டியது. ஒருநாள் போட்டி போல் லெக் திசையில் ஆடியதோடு ரிவர்ஸ் ஸ்வீப்பையும் திறம்பட பயன்படுத்தினார். அஸ்வின் அதிகம் கேரம் பந்துகளை வீச அதனை பட்லர் ஒருநேரத்தில் சரியாகவே கணிக்கத் தொடங்கினார்.

புதிய பந்தை மிகவும் தாமதமாக எடுத்ததன் கோலியின் ‘கேப்டன்சி’ ரகசியம் என்னவென்று தெரியவில்லை. இதனால் நம்பர் 10 வீரர் ஜேக் பால் 60 பந்துகள் நின்று 31 ரன்களை எடுத்தார், பட்லருடன் இணைந்து 54 ரன்கள் முக்கியமாகச் சேர்க்கப்பட்டது.

முன்னதாக பென் ஸ்டோக்ஸிற்கு அஸ்வின் ஒரு பந்தை ஸ்கொயராகத் திருப்ப அது எட்ஜ் ஆகி கோலியிடம் கேட்ச் ஆனது, நடுவர் நாட் அவுட் என்றார் கோலி ரிவியூ செய்தார் ஸ்னிக்கோ மீட்டரில் எட்ஜ் தெரிந்தது, ஆனால் ஸ்டோக்ஸ் கடைசி வரை நம்பாமலேயே சென்றார்.

கிறிஸ் வோக்ஸிற்கு ஒரு பந்தை ஸ்கொயராக திருப்பி ஜடேஜா வெளியே எடுக்க பார்த்திவ் படேலின் அருமையான ரிப்ளக்ஸ் கேட்சிற்கு அவர் வெளியேறினார். அடில் ரஷீத்திற்கு அதே திசையில் பந்தை உள்ளே கொண்டு வந்தார் ஜடேஜா திரும்பும் என்று ஆடாமல் விட்டார் ரஷித் ஆனால் திரும்பாமல் ஸ்டம்பைத்தாக்கியது. பால் அஸ்வினின் 6-வது விக்கெட்டாகச் சென்றார். பட்லரும் ஜடேஜாவிடம் பவுல்டு ஆனார். பட்லர் 76 ரன்களில் 6 பவுண்டரி 1 சிக்சர் அடித்தார்.

அஸ்வின் 112 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x