Published : 18 Dec 2016 07:44 PM
Last Updated : 18 Dec 2016 07:44 PM

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி சாம்பியன்

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் இந்திய அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது.

லக்னோவில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோதின. இந்திய அணி தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தியது.

8-வது நிமிடத்தில் குர்ஜத் சிங் அருமையாக பீல்டு கோல் அடிக்க இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 22-வது நிமிடத்தில் இந்திய அணி மீண்டும் ஒரு பீல்டு கோல் அடித்தது. இந்த கோலை சிம்ரன்ஜித் சிங் அடித்தார். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.

46-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பெல்ஜியம் வீணடித்தது. 53-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கோல் அடிக்கும் வாய்ப்பை இந்திய கோல் கீப்பர் விகாஸ் தாகியா முறியடித்தார்.

எனினும் போராடிய அந்த அணி 70-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. அந்த அணியின் பேஃப் ரைஸ், பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார். அதன் பிறகு இரு அணிகள் தரப்பில் மேலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் இந்திய அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பட்டம் வென்றுள்ளது. கடைசியாக 2001-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் கோப்பை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போட்டியை நடத்திய நாடு கோப்பையை வெல்வதும் இதுதான் முதன்முறை.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x