Last Updated : 22 Dec, 2016 02:53 PM

 

Published : 22 Dec 2016 02:53 PM
Last Updated : 22 Dec 2016 02:53 PM

ஐசிசி ஒருநாள் போட்டி அணி கேப்டனாக கோலி: டெஸ்ட் அணியிலிருந்து புறக்கணிப்பு

2016-ம் ஆண்டு ஐசிசி சிறந்த ஒருநாள் அணிக்கு விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் 2016-ம் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த விராட் கோலி ஐசிசி 2016 சிறந்த டெஸ்ட் அணியில் வீரராகக் கூடத் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

2016-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 இரட்டைச் சதங்களை அடித்த விராட் கோலியை டெஸ்ட் அணியிலிருந்தே புறக்கணித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

ஐசிசி ஒருநாள், டெஸ்ட் அணியில் வார்னர், ஸ்டார்க் ஆகிய இருவரும் உள்ளனர். அதே போல் கோலி தலைமை ஐசிசி 2016 உலக ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா இருவரும் உள்ளனர்.

கோலியின் தலைமையிலான ஒருநாள் அணியில் அதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக், வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் ஆகியோரும் ஆஸ்திரேலியாவிலிருந்து வார்னர், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரும் இங்கிலாந்திலிருந்து ஜோஸ் பட்லர், மே.இ.தீவுகளிலிருந்து சுனில் நரைனும் ஒருநாள் அணியில் கோலியின் தலைமையின் கீழ் உள்ளனர்.

சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 655 ரன்களையும் தொடர் நாயகன் விருதையும் பெற்ற விராட் கோலி 2016-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியில் வீரராக இடம்பெறாதது கிரிக்கெட் வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி டெஸ்ட் அணியில் ஒரே இந்தியர் அஸ்வின் மட்டுமே. டெஸ்ட் அணிக்கு தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அலஸ்டர் குக் கேப்டனாக நியமிக்கப்பட்டது அதை விடவும் ஆச்சரியமளிக்கக் கூடியது.

அதே வேளையில் ஒருநாள் போட்டி அணிக்கு ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

2016 ஐசிசி ஒருநாள் அணி வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), டேவிட் வார்னர், குவிண்டன் டி காக், ரோஹித் சர்மா, ஏ.பி.டிவில்லியர்ஸ், ஜோஸ் பட்லர், மிட்செல் மார்ஷ், ரவீந்திர ஜடேஜா, ஸ்டார்க், ரபாடா, சுனில் நரைன், இம்ரான் தாஹிர்

2016 ஐசிசி டெஸ்ட் அணி வருமாறு:

அலஸ்டர் குக் (கேப்டன்), டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஆடம் வோஜஸ், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், அஸ்வின், ஹெராத், ஸ்டார்க், டேல் ஸ்டெய்ன், ஸ்டீவ் ஸ்மித்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x