Published : 30 Dec 2022 10:50 AM
Last Updated : 30 Dec 2022 10:50 AM

மெல்போர்னில் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட்? - கிரிக்கெட் ஆஸ்திரேலியா தீவிர முயற்சி

உலகின் அட்டகாசமான கிரிக்கெட் மைதானங்களில் பிரதானமான மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டியை நடத்தி அழகு பார்க்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று முடிந்த 2-வது டெஸ்ட் போட்டியின்போது மெல்போர்ன் மைதானத்தை நிர்வகிக்கும் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டூவர்ட் ஃபாக்ஸ், இது குறித்து தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் 2007-க்குப் பிறகு ஆடவில்லை. ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை போன்ற நிகழ்வுகள் தவிர இரு அணிகளும் தனிப்பட்ட தொடர்களில் ஒருவரையொருவர் எதிர்த்து ஆடவில்லை. இப்போது டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் த்ரில் போட்டியை சுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுக் களித்ததையடுத்து இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை மெல்போர்னில் நடத்தலாம் என்றும் இதற்கு இந்திய - பாகிஸ்தான் வாரியங்கள் ஒப்புக்கொண்டால் சிறப்பாக நடத்தி முடிக்கலாம் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆர்வம் காட்டி வருகிறது.

ஸ்டூவர்ட் ஃபாக்ஸ் இது தொடர்பாக தன் உற்சாகத்தை தெரிவிக்கும்போது, “3 டெஸ்ட் போட்டிகளை வரிசையாக மெல்போர்னிலேயே நடத்துவதென்றால் பெரு மகிழ்ச்சிதான். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இது தொடர்பாக ஐசிசியிடம் விஷயத்தை முன் வைத்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது, இந்திய - பாக் வாரியங்கள் ஒப்புக்கொண்டால் இது ஒரு திருவிழாதான்” என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஐசிசி எதிர்கால பயணத் திட்ட அறிக்கையின்படி 2023 - 2027 வரை இருதரப்பு தொடர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைதான் நீடித்து வருகிறது. 2023-ல் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி டிசம்பர் 26-ம் தேதி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.

ஆஸ்திரேலிய ரசிகர்கள் உலகளாவிய விளையாட்டு ரசிகர்கள். அவர்களும் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி ஒரு க்ரீன் டாப் பிட்சில் நடைபெறுவதையும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டென்ஷனான அந்தப் போட்டியையும் கிரிக்கெட் வெளிப்பாட்டுத் திறன்களையும் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் இந்த டெஸ்ட் போட்டி ஒரு விருந்தாகவே அமையும். ஏனெனில், இரு அணிகளின் உண்மையான திறமை டெஸ்ட் போட்டியில் ஆடுவதில்தான் இருக்கிறது. ஆகவே, பிசிசிஐ - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் மெல்போர்ன் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு ஒப்புக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், பாகிஸ்தானுடன் ஆடாமலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எப்படி நடத்த முடியும் என்ற கேள்வியும் ஐசிசி தரப்பில் எழுந்துள்ளதால் இந்த முயற்சிக்கு வித்திடப்பட்டுள்ளதாக உயரிய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x