Published : 28 Dec 2016 06:48 PM
Last Updated : 28 Dec 2016 06:48 PM

டேவிட் வார்னர் அதிரடி சதம்: வேக ரன் குவிப்பில் ஆஸ்திரேலியா 278/2

மெல்போர்ன் டெஸ்ட் 3-ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அசார் அலியின் அபார இரட்டைச் சதத்துடன் 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 2 விக்கெடுகள் இழப்புக்கு 278 ரன்கள் என்ற வலுவான நிலையில் உள்ளது.

அதிர்ஷ்டம் நிரம்பிய வார்னர் 113 பந்துகளில் சதம் கண்டதோடு 143 பந்துகளில் 17 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 144 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்த போது வஹாப் ரியாஸ் தான் முன்னர் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக வார்னரை லெக் திசை பவுன்சரில் சர்பராஸ் கேட்சிற்கு வீழ்த்தினார்.

வார்னர் 81 ரன்களில் இருந்த போது அருமையான இன்ஸ்விங்கிங் யார்க்கரில் வார்னர் பவுல்டு ஆனார், என்ன பயன்? நடுவர் நோ-பால் என்று கத்தினார். ரீப்ளேயில் அது ஒரு பெரிய நோபால் என்று தெரிந்தது. அந்த 2 ஓவர்கள் தொடர்சியாக வீசிய வஹாப் ரியாஸ் 5 நோ-பால்களை வீசினார். வேகம் உள்ள அளவுக்கு அவருக்கு கட்டுக்கோப்பு இல்லை. வார்னர் வீசிய அதே பந்தில் கவாஜாவையும் வீழ்த்தியிருப்பார், ஆனால் இம்முறை வஹாபின் லெக் திசை பவுன்சர் டைவ் அடித்த விக்கெட் கீப்பர் சர்பராஸுக்கு மிகவும் தள்ளி பவுண்டரி சென்றது.

ஆட்ட முடிவில் உஸ்மான் கவாஜா 95 ரன்களுடனும், ஸ்மித் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக ரென்ஷா 40 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் யாசிர் ஷா வீசிய இன்னிங்சின் 14-வது ஓவரின் முதல் பந்தை மண்டியிட்டு லெக் திசையில் ஒரு விளாசு விளாச நினைத்து சுழற்றினார் பவுல்டு ஆனதுதான் மிச்சம், வெளியேறினார்.

46/1 என்ற நிலையிலிருந்து கவாஜா, வார்னர் கூட்டணி 198 ரன்களை 35 ஓவர்களில் சேர்த்தது, கிட்டத்தட்ட ஒருநாள் போட்டி போன்ற ஒரு அதிரடியாகக் காரணம் மிஸ்பா உல் ஹக்கின் புரியாத புதிர் கேப்டன்சிதான். இடது கை பேட்ஸ்மென்களுக்கு யாசிர் உட்பட பவுலர்கள் ஒரு தாக்குதல் பந்து வீச்சை மேற்கொண்டனர், ஆனால் மிஸ்பாவின் களவியூகம் பவுலர்களுக்குச் சாதகமாக இல்லை என்பதோடு, வார்னர், கவாஜாவுக்கு எளிதாக்கியது, ஆஃப் திசையிலும் லெக் திசையிலும் ஏகப்பட்ட இடைவெளிகள் கிடைக்க கவாஜாவும், வார்னரும் தங்கள் இஷ்டத்துக்கு ஆடினர்.

வார்னர் தொடக்கத்தில் மொகமது ஆமிரின் லெந்தை பிடிக்கத் திணறினார், ஒருமுறை அனாவசியமாக மட்டையை விட்டு நன்றாகத் தள்ளிப்போன பந்துக்கு எட்ஜ் என்று கோரி ரிவியூ ஒன்றையும் விரயம் செய்தனர், கிரிக்கெட்டின் மிக மோசமான ரிவியூ என்று கூட இதனை வர்ணிக்கலாம்.

மிஸ்பாவின் களவியூகம் கிட்டத்தட்ட அயல்நாடுகளில் தோனியின் களவியூகத்தை நினைவூட்டுவதாக அமைந்தது, மோசமான கேப்டன்சியினால் யாசிர் ஷா 16 ஓவர்களில் 97 ரன்களையும், வஹாப் ரியாஸ் 14 ஓவர்களில் 77 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். ஆமிர் அருமையாக வீசியும் விக்கெட் கிடைக்கவில்லை.

வார்னர் அவரைத் தடவியதோடு, சதம் எடுத்த ஆமிர் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆகாமல் பவுண்டரிக்குச் சென்ற ‘பிரெஞ்ச் கட்’ ஆகும். ஆனால் மற்றபடி மிஸ்பாவின் புதிர் களவியூகத்தைப் பயன்படுத்தி ஆஃப் திசையில் பவுண்டரிகளை விளாசினார், சதத்திற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய சிக்சரை யாசிர் ஷா பந்தில் எடுத்தார். மேலும் அபாயகரமாக அவர் ஆடிக் கொண்டிருந்த போது நல்ல வேளையாக இன்னும் கொஞ்சம் வஹாப் காலை நீட்டியிருந்தால் மீண்டும் நோ-பாலாக ஆகியிருக்கும் ஷார்ட் பிட்ச் பந்தில் வார்னரை வீழ்த்தினார்.

ஆனால் வார்னரை வீழ்த்திய பிறகும் மிஸ்பா உத்தி மாறவில்லை. நெருக்கடி கொடுக்கவில்லை. வஹாப் ரியாஸ் ஆற்றலையெல்லாம் ஷார்ட் பிட்ச் பந்து வீசப் பயன்படுத்தி விரயம் செய்தார் மிஸ்பா. பாகிஸ்தான் ரன்விகிதம் இப்போது 4.79. இந்த ரன் விகிதம் இந்தப் போட்டியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அதற்கு மிஸ்பா கேப்டன்சி காரணம் என்றால் அது மிகையாகாது.

முன்னதாக பாகிஸ்தான் அணி 310/6 என்ற நிலையில் தொடங்கி அசார் அலியின் அபார இரட்டை சதத்துடனும், சொஹைல் கானின் அதிரடி 65 ரன்களுடனும் 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சொஹைல் கான், நேதன் லயனை 4 மிகப்பெரிய சிக்சர்கள் அடித்து 6 பவுண்டரிகளுடன் 65 பந்துகளில் 65 ரன்கள் விளாசி ரன் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க்கின் சோபிக்காத பந்து வீச்சு விவாதப்பொருளாகியுள்ளது. ஹேசில்வுட், பேர்ட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஓவருக்கு 5 ரன்கள் வீதத்தில் 23 ஓவர்களில் 115 ரன்களுக்கு நேதன் லயன் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். பாகிஸ்தான் அணி அடித்த 43 பவுண்டரிகளில் ஸ்டார்க் 15 பவுண்டரிகளையும், பேர்ட் 17 பவுண்டரிகளையும் விட்டுக் கொடுத்தனர்.

இன்றைய தினத்தில் இரு அணிகளும் சேர்ந்து 411 ரன்களை விளாசியுள்ளன. விழுந்த விக்கெட்டுகளோ வெறும் 5 மட்டுமே. நாளை (வியாழன்) ஆட்டத்தின் 4-ம் நாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x