Published : 22 Dec 2022 05:41 AM
Last Updated : 22 Dec 2022 05:41 AM

அர்ஜெண்டினா கால்பந்து அணி வீரர்கள் ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்டனர் - 40 லட்சம் ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா அணி வீரர்களை வரவேற்க பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள பாலத்தின் மீது திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டம். (அடுத்த படம்) போக்குவரத்து சிக்னல் மீது ஏறிய ரசிகர்கள். படங்கள்: ஏஎப்பி

பியூனஸ் அயர்ஸ்: கத்தாரில் நடைபெற்ற 22-வது பிஃபாஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் அந்த அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வென்று 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

36 வருடங்களுக்குப் பின்னர்கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணி வீரர்கள் செவ்வாய் கிழமை அதிகாலை 3 மணி அளவில்தாயகம் திரும்பினர். பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் அனைவரும் மேல்பகுதி திறந்த பேருந்தில் பேரணியாக அழைத்து வரப்பட்டனர். அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் அர்ஜெண்டினாவில் தேசிய பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மெஸ்ஸி தலைமையிலான அணியை வரவேற்பதற்காக ஒட்டுமொத்த தேசமும் கொண்டாட்டங்களில் மூழ்கியது. வீதியெங்கிலும் சுமார் 40 லட்சம் ரசிகர்கள் திரண்டனர். வழிநெடுகிலும் இருந்த பாலங்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தெரு விளக்கு கம்பங்களை கூட விட்டுவைக்காமல் அதன் மீதும்ரசிகர்கள் ஏறி ஆரவாரம் செய்தனர்.

தங்களுக்குப் பிரமாண்ட வரவேற்பு அளித்த ரசிகர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தார்கள் அர்ஜெண்டினா அணியின் கால்பந்து வீரர்கள். உலகக் கோப்பையை ரசிகர்களிடம் காண்பித்துப் பெருமிதம் அடைந்தார்கள். பேருந்தில் ஊர்ந்து சென்று நினைவுச் சின்னத்தின் அருகே திரண்டிருக்கும் ரசிகர்களுடன் இணைந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுவது தான் முதல் திட்டமாக இருந்தது. ஆனால் பேருந்து வந்து கொண்டிருந்த போது பாலத்தின் மீது திரண்டிருந்த கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென மெஸ்ஸி அமர்ந்திருந்து பேருந்து நோக்கி பாய்ந்தார். மற்றொரு ரசிகர் பாய்ந்த போது கூட்டத்தின் நடுவே தவறி விழுந்தார்.

ரசிகர்களின் எல்லை மீறிய அன்பினால் திட்டமிட்டபடி வீரர்கள் பேருந்தில் அணிவகுப்பை தொடர முடியாத நிலை உருவானது. பேருந்தைச் சுற்றியும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் பேருந்தை முன்னே நகர்த்திச் செல்ல முடியவில்லை. இதைத் தொடர்ந்து அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்தின் தலைவர் சிக்கி டாபியா, வீரர்களால் இனிமேல் தொடர்ந்து பேருந்தில் பயணிக்க முடியாது என்றும், இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் கூறினார்.

காவல்துறையால் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் போனது. அசம்பாவிதத்தைத் தடுக்கும் பொருட்டு மாற்றுத் திட்டம்செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து மெஸ்ஸி உள்பட அனைத்து வீரர்களும் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். பிறகு வான்வழியாக ரசிகர்களின் அன்பையும் ஆரவாரத்தையும் ஏற்றுக் கொண்டார்கள் வீரர்கள். பியூனஸ் அயர்ஸில் வீரர்களை வரவேற்பதற்காகஅர்ஜெண்டினா ரசிகர்கள் லட்சக்கணக்கில் திரண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x